குடிமைப் பணிகள் தேர்வுகளில் இந்தாண்டு தமிழகத்தைச் சேர்ந்த 60 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 25 வயதாகும் பார்வையற்ற மாற்றுத் திறனாளியான பூர்ணசுந்தரி நான்காவது முறையாக யு.பி.எஸ்.சி தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை மணிநகரம் பகுதியைச் சேர்ந்த பூர்ணசுந்தரிக்கு 5 வயது இருக்கும்போது பார்வை நரம்புகள் சுருங்கியதால் தன்னுடைய பார்வை திறனை முற்றிலுமாக இழந்துள்ளார். ஆனால், தொடர்ந்து முயன்று போராடி தற்போது யு.பி.எஸ்.சி தேர்வில் அகில இந்திய அளவில் 286வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதுகுறித்து பூரண சுந்தரி கூறும்போது, "முதலாம் வகுப்பு படிக்கும் போதே, பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. இரண்டாவது படிக்கும்போது, அறுவை சிகிச்சை செய்தும் பார்வை கிடைக்கவில்லை. பெற்றோர்தான் எனக்கு பாடங்களை வாசித்து காட்டுவர்.
பார்வையற்றவர் என்பதை மறந்து லட்சியத்தோடு தேர்வெழுதி, தொடர் முயற்சிகளால் வென்றுள்ளேன். ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். பெற்றோரே எனக்கு இரு கண்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
குடிமைப் பணிகள் தேர்வில் வென்று, மற்றோருக்கும் பெரும் தன்னம்பிக்கை ஏற்படுத்தியுள்ள பூர்ணசுந்தரி, பால நாகேந்திரன் ஆகியோரை தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், “இலக்கில் தெளிவு, உழைப்பில் நேர்த்தியென கண்பார்வை சவாலைக் கடந்து குடிமைப்பணிகள் தேர்வில் சாதித்த மாற்றுத்திறனாளிகள் மதுரை பூர்ணசுந்தரி, சென்னை பாலநாகேந்திரனை அன்போடு வாழ்த்துகிறேன். அகில இந்திய அளவில் 7ம் இடம்பிடித்த கணேஷ்குமார் உள்ளிட்டோருக்கும் பாராட்டுகள்!” எனத் தெரிவித்துள்ளார்.