தமிழகத்தில் மத கலவரத்தை ஏற்படுத்த சங்-பரிவார் மற்றும் இந்துத்வா கும்பல் முயற்சித்து வருகிறது. குறிப்பாக, அண்மைக் காலமாக அ.தி.மு.க. ஆட்சியில் தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைகள் தகர்க்கப்படுவதும், தாக்கப்படுவதும், சிதைக்கப்படுவதும், இழிவு செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.
சமீபத்தில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்டது. கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது காவி சாயத்தை சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்தன. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திராவிட இயக்கங்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நேற்றைய தினம், கன்னியாகுமரி குழித்துறை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியும், குப்பைகளையும் மர்ம நபர்கள் வீசிவிட்டுச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது மீண்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை சேதம் செய்யப்பட்டுள்ளது. பெரியாரின் வெண்கல சிலையில் முகப்பகுதி, கண்ணாடியை சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளார்.
திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ம் தேதி, உலக தமிழ் செம்மொழி மாநாடு விளக்க பொதுகூட்டம், மீஞ்சூர் பேரூர் தி.மு.க சார்பில் நடத்தப்பட்டது. அப்போது முன்னாள் அமைச்சர் அப்போதைய தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தந்தை பெரியார் பெரியார் அவர்களின் மார்பளவு வெண்கல திருவுருவ சிலையை, திறந்து வைத்திருந்தார்.
அந்த சிலையை சில சமூகவிரோதிகள், பெரியாரின் சிலையில் அவரது முகம், மீசை, கண்கண்ணாடி ஆகிய பகுதிகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். நேற்று இரவில் தகவல் அறிந்து மீஞ்சூர் பேருந்து நிலையம் பகுதியில், உடனடியாக தி.மு.கவினர் பெருமளவில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிலை அருகே அண்ணா சிலை, அம்பேத்கர் சிலைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.