தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 6,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டுமே தீவிரமாக இருந்த தொற்று பாதிப்பு இன்று தென் மாவட்டங்களிலும் அதிவேகமாக பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் 1,107 பேருக்கு நேற்று மட்டும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இதுவரை மொத்தமாக 96,438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விருதுநகரில் 577 பேருக்கும், திருவள்ளூரில் 486 பேருக்கும், திருநெல்வேலியில் 387 பேருக்கும், தூத்துக்குடியில் 381 பேருக்கும், செங்கல்பட்டில் 365 பேருக்கும், மதுரையில் 346 பேருக்கும், தேனியில் 283 பேருக்கும் இன்று கொரோனா உறுதியாகியுள்ளது. இதேவேளையில், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,659 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வளவு பெரும் பாதிப்புகளை தமிழகம் சந்தித்து வந்தாளும், தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாக அறிக்கை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகிறது ஆளும் அ.தி.மு.க அரசு. இந்த சூழலில் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலை எட்டவில்லை என உண்மையை மூடி மறைத்துவருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்றால் தமிழகம் சமூக பரவல் என்ற மூன்றாம் நிலையை எட்டியுள்ளதாகவும், ஆனால் இதுதொடர்பாக ஆளும் அ.தி.மு.க அரசு எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என தி.மு.க மருத்துவர் அணியின் துணைத் தலைவர் எம்.எல்.ஏ டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் மாநில அரசு நடத்தும் குளறுபடிகள் மற்றும் மரணங்கள் குறித்து பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து காணொளி மூலம் பத்திரிக்கையாளர் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தை தி.மு.க மருத்துவர் அணி சார்பில் டாக்டர் சரவணன் ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த கூட்டத்தில் பேசிய டாக்டர் சரவணன், “தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா பிரச்சனை தொடர்பாக ஆரம்பத்தில் இருந்தே வெளிப்படைத் தன்மையுடன் அறிக்கை அளிக்கவேண்டும். மேலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அதுமட்டுமல்லாது, மாவட்ட ரீதியாக கொரோனா பரிசோதனை விவரங்களை பிரித்து வெளியிட வேண்டும். குறிப்பாக மதுரையில் ஒரு நாளில் பரிசோதனை செய்யப்பட்ட எண்ணிக்கை மற்றும் அதில் கொரோனா உறுதியான எண்ணிக்கை பட்டியலை வெளியிட வேண்டும் என தி.மு.க சார்பில் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.
மேலும், இறப்பு எண்ணிக்கை 2% குறைவாக தான் இருக்கவேண்டும் என கூறிய போது தற்போது உள்ள எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் 0.7 % தான் இறப்பு எண்ணிக்கை தமிழகத்தில் உள்ளதாக இந்த அரசு கூறியது. இதன் மூலம் நோய் தொற்றை குறைத்துள்ளதாக சுயதம்பட்டம் அடிக்கவே இதுபோல செய்துள்ளது.
இதுபோன்ற நடவடிக்கையினால் சென்னையில் மட்டும் 63% இறப்பு விகிதத்தை மறைத்துள்ளனர். இந்த 63% சேர்த்தால் தமிழகத்தில் இறப்பு விகிதம் 3.66% அதிகரிக்கும். இப்படி மருத்துவ கட்டபைப்பு உள்ள சென்னையில் இந்த குளறுபடி என்றால் மற்ற மாவட்டங்களின் நிலை என்ன? என்பதனைதான் நாங்கள் கேட்கிறோம்.
அதுமட்டுமல்லாது பரிசோதனையின் போது தொண்டை வலியாக சளி எடுத்து பரிசோதிப்பது நெகடிவ் முடிவுகளைதான் தரும். மூக்கு வலியாக எடுப்பதுதான் சரியான முடிவைத் தரும். ஆனால் அந்த சோதனையை இந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
அதேப்போல் தனியார் மருத்துவமனைகளை சேவை செய்யக் கொண்ட வந்தால், அதற்கு தேவையான மருந்துகளை அரசு கொள்முதல் செய்து வழங்கவேண்டும். இதுதொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து எந்த திட்டமும் அரசிடம் இல்லை.
ஆனால் கேள்வி கேட்டால் ஐ.சி.எம்.ஆர் ஆணையின் படி நடப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் ஐ.சி.எம்.ஆர் கணக்கின் படியே இந்த அரசாங்கம் நடந்துக்கொள்ளவில்லை. தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகம் உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலை அடைந்து விட்டதால், திட்டங்களை மாற்றவேண்டும். அதற்கு முதலில் சமூக பரவல் நிலையை எட்டிவிட்டோம் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டும். அப்படி ஒப்புக்கொண்டால் மக்கள் இன்னும் கூடுதல் விழிப்புணர்வுடன் இருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.