கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவிக்கும் நிலையில், நாடுமுழுவதும் உள்ள பல மோசடி கும்பல்கள் இந்த சூழலைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடி வேலையில் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.
அந்தவகையில் சில நாட்களுக்கு முன்பு, பண்ருட்டியில் போலி வங்கிக் கிளை தொடங்கிய 3 பேரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது திருச்சியில், பிரதமர், முதல்வர் படத்தைப் பயன்படுத்தி போலிஸ் கூட்டுறவு சங்கம் தொடங்கிய கும்பல் ஒன்றை போலிஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில், “பாரத விவசாய கூட்டுறவு சங்கம் லிமிடெட்” என்ற பெயரில் வங்கி வேலைக்கு சேல்ஸ் மேன், கம்யூட்டர் ஆபரேட்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட சில பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என ஊர் முழுவதும் விளம்பரம் செய்திருந்தனர். மேலும் அந்த விளம்பத்தில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தையும் அச்சிட்டு வெளியிட்டிருந்தனர்.
இதனைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் பலர் வேலைக்காக அந்நிறுவனத்தின் வாசலில் குவியத்தொடங்கினர். இதனிடையே இதுதொடர்பான தகவல் அம்மாவட்ட விவசாய கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் “பாரத விவசாய கூட்டுறவுச் சங்கம் லிமிடெட்” என்ற பெயரில் போலியான கூட்டுறவு சங்கத்தை சிலர் தொடங்கி மக்களை ஏமாற்றி வருவதாக குற்றப்பிரிவு போலிஸாரிடம் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலிஸார், போலி கூட்டுறவு சங்கத்தை நிறுவிய தொன்னூர் நகரைச் சேர்ந்த சந்தானம் மற்றும் அவரது தந்தை சண்முகம் ஆகியோரைக் கைது செய்தனர்.
பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் கூட்டுறவு சங்கத்தின் பெயரில் பல்வேறு முறைகேடு மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.