தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்னை நாளுக்கு நாள் ஆபத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒரே மாதத்தில் 3 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். சாத்தான்குளத்தில் போலிஸே வியாபாரிகளை படுகொலை செய்தது. நாட்டில் இவ்வளவு நடந்து கொண்டிருக்கிறது கொஞ்சம் மக்களை மீது அக்கறை காட்டுங்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில் " சாத்தான்குளம் அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. அடிமைகளின் காட்டாட்சியில் காவலர்களே சிறை செல்லும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு உள்ளதால் அறந்தாங்கி, சாத்தான்குளம் என வக்கிரக்கொலைகள் தொடர்கின்றன!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறிய அரசால் சாமானியர்களின் மரணம் ஒருபுறம் தொடர்கையில், மறுபுறம் வியாபாரிகள், பிஞ்சுகளின் உயிருக்கும் பாதுகாப்பற்ற அசாதாரண சூழல் உருவெடுத்துள்ளது. டெல்லி முதலாளிகளுக்கு பணிவிடை செய்யும் நேரத்தை சற்று குறைத்து மக்களையும் கொஞ்சம் கவனியுங்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.