சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆணையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் 25 வயதான அனிதா. இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருடன் திருமணம் நடைப்பெற்று பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப்பெற்று தனது பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் ஆத்தூரில் உள்ள தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்திற்கு சென்று வந்திருக்கிறார். அங்கு 25 வயதான விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவருக்கொருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த காதல் விவகாரம் விக்னேஷின் பெற்றோருக்கு தெரிய வரவே விக்னேஷை கண்டித்துள்ளனர்.
மேலும் அனிதா கடந்த 2016 ஆம் ஆண்டு வேறு ஒரு நபருடன் திருமணம் செய்த ஆறு மாதத்தில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற விஷயத்தை அறிந்த விக்னேஷ் அனிதாவிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று விக்னேஷிடம் அனிதா கூறியதாக தெரிகிறது. விக்னேஷ் அதை ஏற்க மறுத்ததால் அனிதா கெங்கவல்லி காவல் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை அன்று புகார் அளித்திருக்கிறார்.
மனுவை பெற்றுக்கொண்ட போலிஸார் செவ்வாய்க்கிழமை அன்று விக்னேஷ், அனித ஆகிய இருவரையும் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வரும்படி அழைத்துள்ளனர். அதனடிப்படையில், அனிதா காவல் நிலையத்திற்கு சென்றிருக்கிறார். ஆனால் விக்னேஷ் காவல்நிலையத்திற்கு வரவில்லை. அனிதா அவருக்குப் போன் செய்து பார்த்தபோது, அவரது செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், விக்னேஷின் நேராக வீட்டிற்கே சென்ற அனிதா, வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் விக்னேஷ் குடும்பத்தாருக்கும் அனிதாவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அனிதாதான் மறைத்து வைத்திருந்த விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கே மயங்கி கீழே விழுந்த அனிதாவை, அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கெங்கவல்லி போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு, தலைமறைவாக இருக்கும் விக்னேஷையும் தேடி வருகின்றனர்.