தமிழ்நாடு

“கொரோனா பாதித்த முதியவர் மருத்துவமனையிலிருந்து மாயமான விவகாரம்” - காவல் நிலையத்துக்கு ஐகோர்ட் ஆணை!

கொரோனா தொற்று காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முதியவர் மாயமான விவகாரத்தில் பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் நாளை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“கொரோனா பாதித்த முதியவர் மருத்துவமனையிலிருந்து மாயமான விவகாரம்” - காவல் நிலையத்துக்கு ஐகோர்ட் ஆணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா தொற்று காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முதியவர் மாயமான விவகாரத்தில் பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் நாளை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 74 வயது முதியவரான ஆதிகேசவனுக்கு கொரோனா தொற்று இருந்ததால் ஈக்காட்டுத்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு இடம் இல்லாததால், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த ஆதிகேசவன், மருத்துவமனையிலிருந்து தப்பி மாயமாகி விட்டார்.

இதுகுறித்து அவரது மகன் மணிவண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஆள் மாயம் என்ற பிரிவில் வழக்கு பதியப்பட்டது.

இந்நிலையில் அவரது மற்றொரு மகன் துளசிதாஸ், தனது தந்தையை மீட்டுத்தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு கடந்த வாரம், நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவமனையிலிருந்து ஆதிகேசவன் வெளியேறிய காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனி கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டியதும், உரிய சிகிச்சை அளிக்க வேண்டியதும் அரசு அதிகாரிகளின் முக்கிய கடமை என தெரிவித்து, ஆதிகேசவனை ஒரு வாரத்தில் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.

“கொரோனா பாதித்த முதியவர் மருத்துவமனையிலிருந்து மாயமான விவகாரம்” - காவல் நிலையத்துக்கு ஐகோர்ட் ஆணை!

மேலும், ராஜீவ்காந்தி மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதால், வழக்கில் பூக்கடை காவல் நிலைய ஆய்வாளரை வழக்கில் சேர்த்தும், கீழ்ப்பாக்கம் காவல் நிலைய வழக்கை பூக்கடை காவல் நிலையத்திற்கு மாற்றியும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பூங்குழலி ஆஜராகி, வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும், ஆவணங்கள் தங்கள் காவல் நிலையத்திற்கு வரவில்லை என பூக்கடை காவல் நிலையத்தில் கூறுவதாகவும் தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாவதி, மாயமான ஆதிகேசவன் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், ஆவணங்களை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து பூக்கடை காவல் நிலையத்திற்கு மாற்ற சற்று தாமதமாகிவிட்டதால், ஒரு வார கால அவகாசம் வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்று வழக்கை நாளைக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், வழக்குப் பதிவு செய்த ஆவணங்கள் வந்துவிட்டதா, விசாரணை தொடங்கிவிட்டதா என விளக்கமளிக்கும்படி, பூக்கடை காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories