கொரோனா வைரஸ் தொற்று துவக்கத்திலிருந்து, பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் தொற்றினால் ஏற்பட்ட இறப்பு குறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிடும் தகவல்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “கொரோனா வைரஸ் தொற்று துவக்கத்திலிருந்து, பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் இறப்பு குறித்து அரசு தினமும் வெளியிடும் தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று தி.மு.க. உள்ளிட்ட மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தியதன் பிறகே- ஜூன் 7-ம் தேதிக்குப் பிறகு, மாவட்ட வாரியாக பரிசோதனைக் குறித்து ஒருநாள் மட்டும் தகவல் வெளியிட்டார்கள். பின்பு அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் , கோவை செல்வபுரம் சுற்றியுள்ள பகுதிகளில், 200 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் , 116 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், சுகாதாரத் துறை இதை மறுத்துள்ளதோடு, அப்பகுதியில், 35 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கோவையில் , கொரோனா நோய்ப் பரவல் இல்லை. நோய்த் தொற்று குறைகிறது அல்லது நோய்த் தொற்றே இல்லை என்று போலியாக காட்ட நினைக்கிறதா கோவை மாவட்ட நிர்வாகம்?
கொரோனாவை பொறுத்தவரை ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும். கோவையில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்கு உதாரணம்.
ஏற்கனவே கடந்த 29.05.2020 மற்றும் 06.07.2020 ஆகிய தேதிகளில், கோவை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கோவை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை, கொரோனா நோய்ப் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனை வாரியாக கொரோனா நோய்த் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள விவரம் , இறந்தோரின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அளிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு இதுவரை எந்த பதிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்படவில்லை.
போதிய அளவுக்கு மருந்துகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் கையிருப்பு உள்ளதா? என்பது தமிழக அரசு சார்பில் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. கோவை மாவட்ட நிர்வாகம் விரைவாக செயல்பட்டு, திட்டத்தை உருவாக்கி, மக்களுக்கு உண்மையான புள்ளிவிவரங்களை வெளிப்படையாக தெரியப்படுத்தி, தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்த - 24 மணிநேர உதவி எண் ஏற்படுத்தி, இதுபற்றிய நிலவரம் குறித்து மக்கள் அதிக தகவல்கள் பெறும் வசதிகளை உருவாக்க வேண்டும்.
ஆகவே இனிவரும் காலங்களிலாவது, கோவையில் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை பரவலாக்கி, தொற்று பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான தகவலை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் இந்தத் தொற்று பரவுதல் மற்றும் இதைக் கட்டுப்படுத்துதல் விஷயத்தில் கோவை மாவட்ட நிர்வாகம் மிகவும் விழிப்புடனும், திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.