சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அ.தி.மு.க அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது இதுவரை சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததால், ஓ.பி.எஸ், கே.பாண்டியராஜன் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தி.மு.க புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது.
ஏற்கனவே மூன்று ஆண்டுகளாக தி.மு.க கொறடா சக்கரபாணி அளித்த புகாரின் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தி.மு.க வழக்குத் தொடர்ந்திருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் இறுதி விசாரணை நடத்தியது. அப்போது, சபாநாயகர் அந்தப் புகாரின் மீது நீண்ட நாட்களாக முடிவு எதுவும் எடுக்காமல் இருந்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருப்பதாக சபாநாயகர் தரப்பில் கூறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு கடந்த பிப் 14 ஆம் தேதி முடித்து வைக்கப்பட்டது.
தற்போது மூன்று மாதங்களுக்கு மேலாகியும் தி.மு.க புகார் மீது சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எவ்வித வாதங்களுக்கும் செல்லாமல் வழக்கு தொடர்பாக சபாநாயகருக்கும், மற்றவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அப்போது, எம்.எல்.ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி நோட்டீஸ் அனுப்ப எதிர்ப்பு தெரிவித்தார். உடனடியாக குறுக்கிட்ட தலைமை நீதிபதி வழக்கில் விரிவான விசாரணை நடைபெறும் போது உங்கள் வாதங்களை வைக்கலாம் என்று கூறி நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டார்.
சபாநாயகர் தனபால், சட்டமன்றச் செயலாளர், அமைச்சர்கள் ஓ.பி.எஸ், பாண்டியராஜன் உள்ளிட்டோரும், எம்.எல்.ஏக்களான செம்மலை, நட்ராஜ் உள்ளிட்ட 13 பேரும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.
தி.மு.க தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல் தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்தோடு முடிவடைவதால் வழக்கை தாமதமின்றி விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கோண்டார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.