தமிழக மக்களே... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களே... சத்தியமா_விடவே_கூடாது. ஆமாம், இனிமேலும் விடக் கூடாது, எப்படியாவது ரஜினிக்கு புதிய சிஸ்டம் மாற்றிக் கொடுத்தே ஆக வேண்டும். சாத்தான்குளம் விவகாரம் நடந்து 10 நாட்கள் முடிந்த பிறகு, குற்றம் செய்த காவலர்களை "சத்தியமா விடவேக் கூடாது" என இன்று ட்வீட் போட்டிருக்கிறார் ரஜினி. சினிமாவில் ரஜினி காட்டும் வேகத்துக்கு அவர் வீட்டு கணினி சிஸ்டமும், இணைய வேகமும் ஈடு கொடுக்க முடியாதது வேதனைக்குரிய விஷயம். ஒரு வாரம் கழித்து ட்வீட் போஸ்ட் ஆகியிருக்கிறது.
இவ்வளவு ஸ்லோவாக இருப்பதால் தான் அவர் சிஸ்டத்தை மாற்ற வேண்டும், என்று அடிக்கடி கூறியிருக்கிறார் என்பது இப்போது தான் விளங்குகிறது. இது புரியாமல் அது அரசியல் அறிக்கை என்று நினைத்துக் கொண்டது, தமிழ் அறிவு சமூகத்துக்கு ஏற்பட்ட பெரும் கலங்கம்.
ஆனால் மற்றொரு கோணத்திலும் நான் சிந்திக்கத் தவறவில்லை. பிரதமர் சொன்னது போல் வீட்டில் விளக்கேற்றி கொரோனாவை விரட்டிய படத்தை உடனே ட்விட்டரில் பதிவிட்டாரே. அப்போது மட்டும் சிஸ்டம் எப்படி ஸ்பீடாக இருந்தது? முதல் முறையாக ஒரு நாள் அடையாள ஊரடங்கை பிரதமர் அறிவித்த போது, " மக்கள் ஒருநாள் மட்டும் வீட்ல இருந்தா கொரோனா அழிஞ்சிடும்" என்று ஃபேக் செய்தியை ட்விட்டரில் பதிவிட்டாரே, அதைக் கூட ட்விட்டர் நீக்கியதே. அப்போது சிஸ்டம் ஸ்பீடாக தானே இருந்தது? இப்போ மட்டும் எப்படி ஸ்லோவானது.
அப்போது தான் என் மூளையின் மெடுல்லா ஆப்லங்கேட்டாவில் பொறி தட்டியது. இது தலைவருக்கு பிடித்த போலிஸ் விவகாரமாச்சே. அதனால் தான் சிஸ்டம் ஸ்லோவாகியிருக்கிறது என்று.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. மாணவர்கள் களத்தில் இறங்கினர். டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் திரண்டு பா.ஜ.க அரசுக்கும், மோடி, அமித் ஷாவுக்கும் எதிராக போராட்டம் நடத்தினர். போராட்டத்தை கலைக்க காவல் துறை, வன்முறையை ஏவியது. மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கியது, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது, துணைக்கு ஆர்.எஸ்.எஸ் குண்டர்களையும் அழைத்துக் கொண்டது, பெண்களுக்கு பாலியல் சீண்டல் கொடுக்கப்பட்டது, பல மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அந்த காட்சிகள் எல்லாம் நாட்டையே அதிர வைத்தது. அதிகார வர்கத்தின் கைத்தடியான போலிஸ் மீது மக்கள் கொதிப்பில் இருந்தனர்.
பாஷாக்களை நாட்டை விட்டே வெளியேற்ற நடக்கும் முயற்சிக்கு எதிராக பொங்க வேண்டிய மாணிக்கம், அப்போதும் இதே போல சாவகாசமாக வந்து ட்வீட் போட்டார். எந்த பிரச்னைக்கு போரட்டம் தீர்வல்ல என்பதே அதன் சாராம்சம். அந்த ட்வீட்டில் ஒரு இடத்தில் கூட " CAA குடியுரிமை திருத்தச் சட்டம்" என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. போராடும் மக்களை தடுத்து நிறுத்துவதும், பா.ஜ.க அரசின் மனம் கோணாதபடி நடந்து கொள்வதும் தான் ரஜினியின் நோக்கமாகவே இருக்கிறது.
ரஜினிக்கு கூட்டம் என்றாலே அலர்ஜி. அதனால் தான் எங்கு போராட்டம் நடந்தாலும், போராட்டம் தீர்வல்ல என்று அதை முடக்குவதிலேயே குறியாக இருக்கிறார். இது ஃபேக் நியூஸை பலமாக கொண்டு இயங்கும் கட்சிகளுக்கு ஒரு பலமாக அமைந்து விடுகிறது.
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். நேரில் சென்ற ரஜினி, "நீங்கள் யார்?" என்ற கேள்வியால் மூக்கறுபட்ட கோபத்தில், " எதுக்கெடுத்தாலும் போராட்டம் பண்ணா நாடே நாசாமாகிடும்" என்று போலிசுக்கும், அரசுக்கும் ஆதரவாக பேசினார். வாழ்வாதாரத்துக்காக போராடிய மக்களின் நோக்கத்தை இழிவுபடுத்தினார். தன்னுடைய படம் வெளியாவதை ஒட்டி, பரபரப்பு பேட்டி கொடுத்து கூட்டம் சேர்க்கும் ரஜினிக்கு, ஸ்டெர்லைட்டை எதிர்த்து தங்கள் வாழ்வுக்காக மக்கள் கூட்டமாக போராடியது தேவையற்றதாக தெரிந்திருக்கிறது.
தூத்துக்குடி விவகாரத்தில் 13 பேர் கொல்லப்பட்ட போதே போலிசுக்கு ஆதரவாக பேசிய ரஜினி, சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொல்லப்பட்டதற்கு ஏன் போலிசுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்திருக்கிறார்?. தூத்துக்குடி விவகாரத்தில் வேதாந்தா என்ற கார்ப்பரேட் நிறுவனம் தொடர்புடையது என்பதால், நன்மைகளை எண்ணி ஆதரித்தாரோ என்னவோ. சாத்தான்குளத்தில் கொல்லப்பட்டது வெறும் செல்போன் கடை வியாபாரிகள் தானே என்று கூட நினைத்திருக்கலாம்.
இதையெல்லாம் சுட்டிக் காட்டி ரஜினியிடம் கேள்வி கேட்டால், மூக்கை மூடிக் கொண்டு தியானத்துக்கு போய்விடுவார். கேட்டால்,ஆன்மிக அரசியல் என்பார்.
சாத்தான்குளம் விவகாரத்தில் மக்களும், வியாபாரிகளும், எதிர்க்கட்சிகளும் உடனடியாக கொடுத்த அழுத்தமே, குற்றம் செய்த போலிஸ் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் அரசு அதிகாரத்தின் முகத்திரையை கிழித்துள்ளது. ரஜினியை போல 10 நாட்களுக்கு பிறகு போட்டோ ஷூட் செய்து, பஞ்ச் டையலாக் யோசித்துவிட்டு மெதுவாக ட்வீட் போட்டால், வழக்கை மூடி மறைத்துவிட்டு, அடுத்த கொலைக்கு தயாராகியிருப்பார்கள் குற்றம் செய்த காவலர்கள்.
அரசியலுக்கான அடிப்படைத் தகுதியே மக்களுக்காக குரல் கொடுப்பது. முதல் ஆளாக களத்தில் நிற்பது. அந்த அடிப்படையே தெரியாத ஒருவரைத் தான் தமிழ் சமூகம் அரசியல் சென்சேஷனாக பார்த்து வந்திருக்கிறது என்பது வேதனைக்குரிய உண்மை.
பா.ஜ.க ஆட்சியில் வாழ்வுரிமைக்காக மக்கள் போராடி வரும் நேரத்தில் ஆன்மிக அரசியல், ஊழல் தான் முக்கிய பிரச்னை என்று திசை திருப்பும் அரசியல் பேசுவதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம், ரஜினி எழுதித் தரும் வசனங்களை பேசும் வெறும் நடிகர் என்று.
இப்போது கூட பாருங்கள் " சத்தியமா விடவே கூடாது" என்று கூறியிருக்கிறார். சரி என்ன செய்யப் போகிறார்? போராட போகிறாரா? போராட்டம் தான் ரஜினிக்கு பிடிக்காதே! அதற்கு அவரிடம் பதில் இருக்காது. ஏனெனில் ஸ்கிரிப்டில் அவ்வளவு தான் இருக்கிறது.
இனி வரும் காலங்களிலும் ரஜினி எப்போ வருவார், எப்படி வருவார் என்றெல்லாம் தெரியாது. ஆனால், நிச்சயம் லேட்டாக தான் வருவார், அதே வெற்று வசன பேப்பரோடு. அவரை "சத்தியமாக வர விடவே கூடாது" அறிவார்ந்த தமிழ் மக்கள்.