சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனான வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கான காரணங்கள் தெளிவாக தெரிந்தும் ஒருவர் கூட கைது செய்யப்படாதது ஏன் என தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற மக்களவைக் குழு கழகத் துணைத்தலைவர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலிஸாரின் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி ரத்தம் வழியும் நிலையில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சென்ற காரிலும் ரத்தக் கறைகள் படிந்துள்ளது. இப்படியிருக்க மருத்துவர் எப்படி உடற்தகுதி சான்றிதழ் அளித்தார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மாஜிஸ்திரேட் எப்படி இதனை கவனிக்காமல் இருந்தார்? இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பாமல் சிறை அதிகாரிகள் எதற்காக சிறையில் அடைத்தனர்? இவற்றுக்கான காரணங்கள் தெளிவாகத் தெரிந்தும் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படாதது ஏன்? என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், காலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொல்லப்பட்ட சம்பவத்தில் விசாரணையின்போது நீதிபதியை மிரட்டும் வகையில் செயல்பட்டதாக, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் ஆகியோர் புதிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளை காப்பாற்றுவதில் பழனிசாமியின் அரசு காட்டும் ஆர்வத்தையும் தீவிரத்தையும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் காட்டியிருந்தால் இன்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டும் நிலையை அடைந்திருக்காது என கனிமொழி எம்.பி குற்றஞ்சாட்டியுள்ளார்.