சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவர்களது குடும்பத்திற்கு நீதி வழங்க IPC 302-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கடை திறந்து வைத்திருந்ததாகக் கூறி, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸை போலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியதில் அவர்கல் இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரக் கொலைக்குக் காரணமான காவல்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஜெயராஜ் உடல்நலக் குறைவாலும், அவரது மகன் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலாலும் இறந்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் கடும் எச்சரிக்கைகளையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்ற அனுமதி பெறப்படும் என முதல்வர் பழனிசாமி இன்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தால் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை CBI விசாரணைக்கு மாற்றியுள்ளார் முதல்வர் பழனிசாமி.
நீதி வழங்கும் அரசியல் துணிவும், முதுகெலும்பும் அரசுக்கு இருந்திருப்பின் உயிர்பறித்த காவல்துறையினர் இப்போதும் சுதந்திரமாக உலவ முடியுமா?
இரு அப்பாவிகளின் உயிர் பறிக்கப்பட்டிருப்பதற்கும் அவர்களது குடும்பத்திற்கும் நீதி வழங்க வேண்டும் எனில், அவர்களின் கோரிக்கையை ஏற்று IPC 302-ன்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலிஸாரை உடனே கைது செய்ய வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தென்காசி வீரகேரளம்புதூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் போலிஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “ஒரே வாரத்தில் நான்காவது மரணம்! நாட்டை போலீஸ் கையில் கொடுத்துவிட்டு முதல்வர் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.