“சாத்தான்குளம் கொடூரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க குரல் எழுப்பவேண்டும்” என இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலிஸாரால் கைது செய்யப்படு கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாத்தான்குளம் காவல்துறை அதிகாரிகள் சிறையிலேயே, அவர்கள் இருவரையும் கொடூரமான முறையில் சித்திரவதைகள் செய்து அடித்துக் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அராஜக போலிஸாரின் இந்தக் கொடூரச் செயல் மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. எதிர்க்கட்சியான தி.மு.க, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் அளிக்கப்படவேண்டும் என அரசை வலியுறுத்தி வருவதோடு, சட்டரீதியாக பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு துணை நிற்கும் என அறிவித்துள்ளது.
சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையைக் கண்டித்தும், இதற்குக் காரணமான காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் சமூக வலைதளங்களில் குரல்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நடந்த கொடூரத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்தக் கோரச் சம்பவத்துக்கு எதிராக நாம் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.