தமிழ்நாடு

“நடக்காத பணிகளுக்கு சாதனை விழாவா?” - அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கார்த்திக் எம்.எல்.ஏ கேள்வி!

முடிக்காத பணிகளுக்கு அவசரமாக துவக்க விழாவா? என அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நா.கார்த்திக் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.

“நடக்காத பணிகளுக்கு சாதனை விழாவா?” - அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கார்த்திக் எம்.எல்.ஏ கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முடிக்காத பணிகளுக்கு அவசரமாக துவக்க விழாவா? நடக்காத பணிகளுக்கு சாதனை விழாவா?” என அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை , உக்கடம், பெரியகுளம் வடக்கு பகுதியில், கோவை மாநகராட்சி சார்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 39.74 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் நடக்கிறது. குளத்தில் சுமார் 25 அடி தூரம் மண் போட்டு, மூடப்பட்டு அதில் திட்டப்பணிகள் நடத்தப்பட்டது.

அதிக நீர் தேக்கம் இருந்தால் பணிகள் பாதிக்கப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் குளக்கரையின் ஒரு பகுதியில் இருந்த தடுப்பணையை சேதப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதை மறைக்க, யாரோ மர்ம நபர்கள் தடுப்பணையைச் சேதப்படுத்தியதாக புகார் கூறி ஏமாற்றி விட்டார்கள்.

பெரியகுளத்தில் தற்போது முழு அளவில் சாக்கடை நீர் தேங்கியுள்ளது. இங்கே சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எந்த முயற்சியும் கோவை மாநகராட்சி எடுக்கவில்லை. சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால்தான் சேத்துமா வாய்க்கால் மற்றும் பல்வேறு பகுதியிலிருந்து வரும் சாக்கடை கழிவு நீரை சுத்தம் செய்து குளத்திற்குள் விட முடியும்.

குளத்தின் கரையை அழகு படுத்துவதாகச் சொல்லிவிட்டு, அதில் துர்நாற்றம் வீசும் சாக்கடை நீரை தேக்கி வைத்தால் மக்கள் எப்படி பயன்படுத்த முடியும்? "ஐ லவ் கோவை" என எழுதி வைத்தால் கோவை அழகாக, ரம்மியமாக மாறிவிடுமா?

அந்த குளக்கரையோரம், சிறிது நேரம் நின்று பார்க்கும் மக்கள், கழிவுநீரின் நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பொத்திக் கொண்டு ஓடும் அவலம் இருக்கிறது. இந்தக் குளத்தில் பணிகள் அரைகுறையாக இருக்கும்போதே தமிழக முதல்வரை வரவழைத்து, அவசரகதியில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிரம் காட்டி வருகிறார்.

“நடக்காத பணிகளுக்கு சாதனை விழாவா?” - அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கார்த்திக் எம்.எல்.ஏ கேள்வி!

அரைகுறை மற்றும் அவலமான நிலைமையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனது சாதனையாக காட்ட முயற்சிக்கிறார்.

23.83 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட வாலாங்குளம் சீரமைக்கும் பணிகளும் 30 சதவீதம் கூட முடியவில்லை. பணிகள் நிறைவடையாமல் இதை திறந்து வைத்தால் மக்கள் எப்படி பயன்படுத்த முடியும்?

776.86 கோடி ரூபாய் செலவில் பில்லூர் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் மற்றும் வனப்பகுதியில் திட்டப்பணிகள் நடத்துதல் போன்றவற்றில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கிறது. இதை சரி செய்யாமல் அவசரகதியில் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி விட்டதாக, கட்டிக்கொள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆர்வம் காட்டுகிறார்.

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மேற்கு புறவழிச்சாலை திட்டம், நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள், மேம்பால கட்டுமானப் பணிகள், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிறுத்தம், குடிமராமத்து பணிகள் மற்றும் கோவை விமான நிலைய விரிவாக்கம் போன்ற பணிகள் நடக்காமல் முற்றிலும் முடங்கிப்போய் கிடைக்கிறது.

230 கோடி ரூபாய் செலவில் டெண்டர் விடப்பட்ட நொய்யல் ஆறு, குளங்கள் மற்றும் தடுப்பணைகள் புனரமைப்பு திட்டப் பணிகளிலும் குளறுபடிகள் இருக்கிறது. தனியார் நபர் ஒருவர் நொய்யல் ஆற்றின் உபரி ஓடையில் நீர் எடுக்க குழாய் பதித்தார். இதை நரசிபுரம் விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். நொய்யல் ஆறு ஆக்கிரமிப்பு மற்றும் விதிமுறை மீறல்களை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தப் பேரிடர் காலத்திலும், திட்டப் பணிகளுக்கு புதிய டெண்டர்கள் விட்டு, அதில் முறைகேடுகள் செய்வதில்தான் , அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது பினாமி ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.‌

மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். அ.தி.மு.க ஆட்சியின் கடைசி கால நேரத்தில், அவசர கதியில், அலங்கோலமாக பணிகளைத் துவக்கக்கூடாது.

உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் மற்றும் நொய்யல் சீரமைப்பு பணிகளில் நடக்கும் முறைகேடுகளை கோவையில் உள்ள மக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். விரைவில் மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என்று எச்சரிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories