வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை சந்தித்து பேச நளினிக்கு அனுமதி மறுப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரும், சிறை விதிகளின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி வழங்க வேண்டும். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக நளினியையும், முருகனையும் சந்தித்துப் பேச சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால் முருகன் சிறையில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் எனவும், நளினியும் முருகனும் சந்தித்து பேச அனுமதி வழங்க கோரியும் நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, சிறைவிதிகளின் படி, இருவரையும் சந்தித்து பேச கூட அனுமதி மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பி, இந்த மனு குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.