இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் வரிசையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் மையப்புள்ளியாக சென்னை மாறியிருக்கிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் 37 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் 30-ஆம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இறைச்சிக் கடைகளும், மீன் கடைகளும் மூடப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகர மாநகராட்சி கட்டுப்பாட்டில் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம், சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. தமிழக அரசு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரையில் முழுமையான ஊரடங்கை அமல்படுத்தவுள்ளது.
எனவே கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த முழுமையான ஊரடங்கு காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மேற்கூறிய 4 இறைச்சிக் கூடங்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து கோழி, ஆடு, மாடு, இறைச்சி கடைகள் மற்றும் மீன்கடைகள் ஆகியவை ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழுமையாக மூடப்படுகின்றன.
எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது” என கேட்டுக்கொண்டுள்ளது. அரசின் இந்தத் தடை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவு என்பது அடிப்படைத் தேவை. இறைச்சியும் உணவு வகையில் இருக்கும்போது ஏன் இறைச்சிக் கடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “இறைச்சி ஒரு அத்தியாவசிய உணவு, ஹோட்டல், உணவு விநியோகம், காய்கறி கடைகள் போன்றவற்றை அனுமதிக்கும்போது இறைச்சிக்கு மட்டும் ஏன் கட்டுப்பாடு?
கொரோனா பரவலைத் தடுக்க இறைச்சி சந்தையை கட்டுப்படுத்துவது சரி, ஆனால் சிறிய கடைகள் மற்றும் வீட்டு விநியோகங்களை எப்படி கட்டுப்படுத்தலாம்? இறைச்சி எந்த வகையில் ஆபத்தானது?
மற்ற காய்கறி கடைகளை விட இறைச்சி கடைகள் கொரோனாவை எவ்வாறு பரப்புகின்றன? இது உணவுகளின் மீது திணிக்கப்படும் பாகுபாடு. அசைவ உணவு சாப்பிடுவர்களுக்கு எதிரான உணவுத் தாக்குதல்” எனத் தெரிவித்துள்ளார்.