தமிழ்நாடு

"பிற்படுத்தப்பட்டோர் நல கமிஷன் செயல்படாமல் கிடக்கலாமா?” - எடப்பாடி அரசுக்கு கி.வீரமணி வேண்டுகோள்!

கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தலைவர் - மற்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படாதது ஏன் என தமிழக முதலமைச்சருக்கு ஆசிரியர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

"பிற்படுத்தப்பட்டோர் நல கமிஷன் செயல்படாமல் கிடக்கலாமா?” - எடப்பாடி அரசுக்கு கி.வீரமணி வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் மிக முக்கியமாகக் கருதப்படும் பிற்படுத்தப்பட்டோர் நல கமிஷன் தலைவர், உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படாத நிலையில், ஒரு செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்தும், உடனே அதனை செயல்பட வைப்பது இந்தக் காலகட்டத்தில் மிகவும் அவசியம் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வலியுறுத்தி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

"தமிழ்நாடு அரசின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷன் (Tamil nadu Backward Classes Commission) என்பது 1993 முதல் நிரந்தரமாக அமைக்கப்படும் கமிஷன் ஆகும்.

அக்கமிஷனுக்குத் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் மொத்தம் 9 உறுப்பினர்கள் உள்ளனர்.

அதில் தலைவர், பிற்படுத்தப்பட்ட நலனில் அனுபவம் வாய்ந்த முக்கிய உறுப்பினர்கள் ஆறு பேர். அரசு அதிகாரிகள் இருவர் (ex officio) - அதில் பிற்படுத்தப்பட்டோர் துறை அதிகாரிகள் என்கிற தன்மை காரணமாக உறுப்பினர்களாக இருப்பார்கள். (பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டத் துறையின் அதிகாரிகள் அதில் இருவர்).

கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தலைவர், உறுப்பினர்கள் நியமனமே செய்யப்படாமல், அந்தக் கோப்புகள் அப்படியே இருப்பதாக அறியப்படுகிறது.

மிக முக்கியமான வழக்குகளைத் தாக்கல் செய்து, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான உரிமைகளுக்காக நீதிமன்றங்களில் வாதாடிடும் இந்தக் காலகட்டத்தில், இப்படி ஒரு தேக்க நிலை - அதுவும் ஏறத்தாழ 18 மாதங்களாக செயல்படாமலே இருக்கிறது என்ற தகவல் அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.

நல்ல சட்ட அனுபவம், நீதி பரிபாலன அனுபவம், சட்ட ஞானம், சமூகநீதியில் ஆழ்ந்த நம்பிக்கையும், செயல் திறனும் உடைய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழ்நாட்டில் ஏராளம் உள்ள நிலையில், அரசு தகுதியான ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டியது அவசர அவசியமல்லவா! இதற்கு என்ன தயக்கம்?

மேலும் காலதாமதம் செய்வது தவறு; சமூகநீதித் துறையில் இப்படி ஒரு தாமதம் - கிடப்பு ஏற்பட்டது மிகவும் வேதனைக்குரியது. உடனடியாக செயல்பட வேண்டியது முக்கியம்!"

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories