தென்னக ரயில்வேயில் சரக்கு வண்டி பாதுகாவலர் பணிக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 13ம் தேதி வெளியாகின. அதில் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 96 பேரில் 5 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 91 பேரும் வட இந்தியர்கள். இந்தத் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தென்னக ரயில்வேயில் 96 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், தமிழர்கள் வெறுமனே 5 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருப்பது தமிழர் விரோதப் போக்கிற்கு சான்றாக அமைவதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தென்னக ரயில்வேயில் சரக்கு வண்டி பாதுகாவலர் பணிக்கு தமிழகத்திலிருந்து 5 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழர்களுக்கு எதிரான பாகுபாட்டுக்கு இதுவே சான்று. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த பணிச்சேர்க்கை நடவடிக்கையை மறு ஆய்வு செய்து சமூக நீதியை உறுதிசெய்ய வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.