புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே இடையான் வயலைச் சேர்ந்த நாகேஷ்வரனின் மகள் சாவித்திரி. 19 வயதான சாவித்திரி புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி விலங்கியல் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இவரும் தோப்புக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் விவேக் என்பவரும் 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவர்களது காதல் விவகாரம் சாவித்திரி வீட்டிற்கு தெரியவர கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கடந்தவாரம் சாவித்திரியும், விவேக்கும் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இருவரும் நண்பர்கள் உதவியுடன் காரில் கோவைக்குச் சென்றுள்ளனர். அப்போது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கார் சென்று கொண்டிருக்கும் போது அங்குள்ள சோதனைச் சாவடியில் கார் பரிசோதனை செய்யும் போது இருவரை போலிஸார் அழைத்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் இருவரும் காதலர்கள் என்றும் திருமணம் செய்துக்கொள்வதாக கோவை செல்வதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து இரண்டு பேரையும் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனிடையே இரு வீட்டாருக்கும் போலிஸார் தகவல் கொடுத்துள்ளனர்.
சிறிது நேரத்தில் காவல் நிலையத்திற்குவந்த சாவித்திரியின் குடும்பத்தினர் பெண்ணை தங்களுடன் அனுப்புமாறு கூறியுள்ளனர். ஆனால் சாவித்திரி, தனது குடும்பத்தார் ஏற்கனவே இரண்டு முறை தன்னை அடித்து கொலை செய்ய முயற்சித்ததால் அவர்களுடன் வீட்டிற்குச் செல்ல மறுத்துள்ளார். வேண்டுமென்றால் அரசு விடுதிக்கு அனுப்பி வையுங்கள் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் சாவித்திரியின் கோரிக்கையை ஏற்காத குளித்தலை போலிஸார், "விவேக்கிற்கு 21 வயதாக இன்னும் 4 மாதம் உள்ளது, அதனால் விடுதிக்கு உன்னை அனுப்ப முடியாது" என கூறி சாவித்திரியை அவர்களது பெற்றோருடன் வலுக்கட்டாயமாக போலிஸார் அனுப்பி வைத்தனர். குடும்பத்தினருடன் செல்ல மறுத்த சாவித்திரியை வலுக்கட்டாயமாக கூட்டிச் சென்றுள்ளனர்.
இதனிடையே விவேக் குடும்பத்தினர் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நடந்த ஜூன் 11ம் தேதியே சாவித்திரி வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறி, போலிஸாருக்கு தகவல் தெரிவிக்காமலேயே இரவோடு இரவாக சாவித்திரி உடலை எரித்துள்ளனர். இதனிடையே காரில் வந்த கும்பல் ஒன்று விவேக்கிடம் பேசவேண்டும் என கூறி அவரை தனியாக அழைத்து சென்று கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து சாவித்திரி உயிரிழந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த விவேக், மாதர் சங்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்புடன் சேர்ந்து மாவட்ட போலிஸ் எஸ்.பி அருண் சக்தி குமாரிடம் நேரில் சென்று சாவித்திரியை அவரது குடும்பத்தினர் கொலை செய்துவிட்டதாக புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், “சாவித்திரி உறுதியான பெண். அவர் வீட்டார் தான் சாதி ஆவணப்படுகொலை செய்திருப்பார்கள். எனவே அவர் மரணத்தில் சந்தேகம் உள்ளது. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இதனிடையே சாவித்திரி குடும்பத்தினர் உயிரிழந்த பெண் தற்கொலை செய்துக்கொண்டதாகவும், உடனடியாக உடல் எரிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால் இதுதொடர்பாக போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்படாமல் உடல் உடனடியாக எரிக்கப்பட்டதாகவும் இதுதொடர்பாக விசாரணை நடத்த கிராம நிர்வாக அதிகாரி இளையராஜா ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விவேக் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அவரை தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பை சார்ந்தவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளதாக கூறுகின்றனர். சாவித்திரியின் மரணத்துக்கு காவல்துறையினரும் முக்கிய காரணமாகியுள்ளனர். உயிருக்கு ஆபத்து என்று மன்றாடிய காதல் ஜோடியை பாதுகாக்காமல் சாதி ஆணவத்துக்கு துணை போனது, தெரிந்தே சவக்குளிக்குள் தள்ளி கொலை செய்ததற்கு சமம் என்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.