சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் கடந்த 5 நாட்களுக்கு முன் குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா இன்ஸ்டிட்யூட் அண்ட் மெடிக்கல் செண்டர் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவருகிறார்.
மருத்துவமனையில் மூச்சு திணறலுடன் அனுமதிக்கப்பட்ட ஜெ.அன்பழகனுக்கு வெண்டிலேட்டர் மூலம் 80 சதவீத சுவாசக்காற்று அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே நேற்றைய தினம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவர்களின் உடல் நலன் குறித்து நேரில் சென்று, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
இந்நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் சுவாச காற்று 29 சதவீதம் மட்டுமே தேவையாக உள்ளது. அதனால் அவர் விரைவில் குணமடைய வாய்ப்புள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. இந்த சூழலில் தி.மு.க. மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி ட்விட்டரில், ஜெ.அன்பழகன் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கழக செயல்வீரராய் எதையும் வெளிப்படையாக, உறுதியாக பேசக் கூடியவர், எந்த சூழலிலும் கழகத்தின் நலனையே முக்கியமெனக் கருதும் போர்க்குணம் கொண்டவர், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. அவர்கள்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர், தற்போது நலம்பெற்று வருகிறார் என்ற செய்தி ஆறுதல் அளிக்கிறது. விரைவில் அவர் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.