கோவை கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிச்கையென்புதூர் சுற்றியுள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமாக பாறைகளை வெட்டி விற்கப்படுகிறது. இதனால் தினந்தோரும் கல்குவாரிகளில் இருந்து அளவுக்கு அதிகமாக கல் ஏற்றிக்கொண்டு கிணத்துக்கடவு அருகே சிங்கையென்புதூர் வழியாக கேரளா எல்லைக்கு மிக வேகமாக நூற்றுக்கணக்கான லாரிகள் செல்வதால் மக்கள் சாலையில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கடந்த மே 26ம் தேதி லாரியில் அளவுக்கு அதிகமாக கல் ஏற்றி வந்ததால் சாலையின் மறுபுறத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பழனிச்சாமி என்பவர் மீது கல் ஒன்று விழுந்தது. அந்த கல் விழுந்ததில் அவர் காலில் அடிபட்டு கீழே விழுந்த அதிர்ச்சியில் மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதனிடையே அங்கு சுற்றி இருந்த மக்கள் முதலுதவி சிகிச்சை அளித்து அவரை பாதுகாத்தனர். மேலும் அப்பகுதிக்கு வந்த 10 லாரிகளை மக்கள் சிறைபிடித்தனர். மக்கள் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது அவ்வழியே சென்ற கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மக்களிடம் பேசினார்.
வட்டாட்சியரிடம் புகாரை பதிவு செய்யவே, உடனடியாக போலிஸார் அங்கு வந்தனர். வந்தவர்கள் நடவடிக்கை எடுக்காமல் அந்த லாரிகளை காவந்து செய்து அனுப்பவதிலேயே குறியாக இருந்தனர். இதனைக் கண்டு கோபமடைந்த தென்றல் செல்வராஜ், கனிம வளங்கள் மற்றும் மதுபானங்கள் கடத்த துணை போகும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி .வேலுமணி மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எட்டிமடை சண்முகம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அமைச்சரின் குவாரியில் இருந்து வரும் லாரிகள் என்பதாலேயே, அவற்றை காப்பாற்ற முயற்சிக்கிறீர்களா என போலிஸை நோக்கி கேள்வி எழுப்பினார்.
இந்த உண்மையை பேசியதால், ஆளுங்கட்சியினர் தூண்டுதலின் பேரில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக போடப்பட்ட பொய் வழக்கில் நேற்றிரவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார் தென்றல் செல்வராஜ்.
இதனை அடுத்து இன்று காலை மேலும் 10 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதியரசர் செல்லையா முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கோபி கிளை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த தென்றல் செல்வராஜ், “கோவையில் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான குவாரிகளில் கனிமவளம் கடத்தப்படுவது - கனிம வளக்கடத்தலில் ஈடுபடும் லாரிகளால் ஏற்படும் விபத்துகளை தட்டிக்கேட்டதால் கைது செய்துள்ளனர். இதற்கெல்லாம் தி.மு.கவினர் அஞ்ச மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.