கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் குறைவான கடைகளே செயல்பட்டு வருகின்றன. அரசு விற்பனையகங்களில் வாங்கும் பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கெட்டுப்போவதால் சாமானிய மக்கள் பலரும் பெருத்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். சாமானிய மக்களின் இன்னல்களைக் கண்டுகொள்ளாத அரசு இயந்திரம், ‘பெரிய இடத்து’ மனிதர்களுக்கு மட்டும் ஓடி ஓடி சேவகம் செய்கிறது.
நாடகக் கலைஞரும், சினிமா நடிகருமான எஸ்.வி.சேகர் சமீபத்தில் தனது ட்விட்டர் பதிவில், “இன்று காலை வாங்கிய 13 ஆவின் பால் பாக்கெட்டுகளில் 9 பாக்கெட்டுகள் பால் குக்கரில் காய்ச்சும்போது திரிந்துவிட்டது. வீட்டில் 90 வயது தாயார் 7 வயது 2 வயது குழந்தைகள் உள்ளனர். நான் என்ன செய்வது’ என முதல்வரைக் குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து எஸ்.வி.சேகர் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் தங்களுக்கு பதிவு செய்த 3 மணி நேரத்துக்குள் 9 புதிய double toned பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகத்திலிருந்து ஒரு அதிகாரி வீட்டிற்கு வந்து மாற்றிக்கொடுத்து சென்றார். தங்களுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்” எனப் பதிவு செய்தார்.
எஸ்.வி.சேகரின் இந்த பதிவுகள் கடும் சர்ச்சைகளுக்கு உள்ளாகின. சாதி ரீதியாகவும், அதிகார ரீதியிலும் மேலிடத்தோடு நெருங்கிய தொடர்புகொண்டிருப்பதால் எஸ்.வி.சேகரின் பதிவைத் தொடர்ந்து அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், சாமானியர்களின் புகார்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை எனவும் பலரும் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், தமிழின் முன்னணி எழுத்தாளர் சாரு நிவேதிதா முதல்வரின் அதிகாரப்பூர்வ கணக்கைக் குறிப்பிட்டு இன்று ஒரு ட்வீட் செய்துள்ளார்.
அதில், “பட்டினப்பாக்கம் அரசு மீன் அங்காடியில் மீன் வாங்கும்போது கடந்த மூன்று முறையும் கெட்டுப்போன மீனே கிட்டியது. புகார் செய்தும் பலனில்லை. இன்று 1500 ரூபாய்க்கு அயிலா மீன் வாங்கினேன். கெட்டதைக் கொடுத்து விட்டனர். கனிவுகூர்ந்து உதவ வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
சாரு நிவேதிதாவின் இந்தக் கோரிக்கைக்கு இதுவரை முதல்வரோ, அரசு அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கையும் எடுத்தாகத் தெரியவில்லை. சாதியையும், செல்வாக்கையும் பொறுத்தே அரசு இயந்திரம் செயல்படும் எனப் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.