இலங்கை தமிழ் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு:
இலங்கை சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் திரு. ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி எனக்கு தாங்க முடியாத துயரத்தினையும், பேரதிர்ச்சியையும் அளித்தது. அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையின் முன்னாள் அமைச்சரும் தொழிற்சங்கவாதியுமான செளமியமூர்த்தி தொண்டைமானின் பேரனான இவர், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவராக பொறுப்பேற்று, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு வந்தவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த அவர் - காவேரி மருத்துவமனையில் கலைஞர் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் என்னை நேரில் சந்தித்து, உடல்நலம் விசாரித்தவர்.
இலங்கை அதிபராக இருந்த திரு. மைத்ரிபால சிறிசேனா அவர்கள் கலைஞர் உடல்நலம் குறித்து விசாரித்து எழுதிய கடிதத்தை என்னிடம் அளித்து - உலகத் தமிழர்களின் நலன் காக்க கலைஞர் விரைவில் குணம் பெற வேண்டும் என விரும்பியவர்.
தங்களின் நலன்களுக்காக காலமெல்லாம் பாடுபட்ட ஒரு இளம் தலைவரை இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இழந்த சோகத்தில் மூழ்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர் திரு. ஆறுமுகன் தொண்டமானை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.