கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்தும், தடியடி நடத்தியும் வருகின்றனர். இதுவரை ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சாமானியர்கள் மீது தாக்குதல் நடத்தும் போலிஸார் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களை விட்டுவிடுகின்றனர். அதே நேரத்தில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக செயல்படும் அ.தி.மு.க மக்களுக்கு எந்த வித உதவிகளை செய்யாமலும் தனக்கென்ன என்பதுபோல திரிகிறது.
மேலும் உதவிகள் செய்தாலும் ஊர் கூட்டி விளம்பரம் செய்து ஊரடங்கு விதிகளை கடைபிடிப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் அமைச்சர் சி.வி.சண்முகம் நிவாரணம் வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரை சுற்றியுள்ள பகுதிகளில் அ.தி.மு.க சார்பில் கொரோனா நிவாரணம் வழங்கின. அந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டார். மக்களை கூட்டமாக கூட்டிய அ.தி.மு.கவினர் நீண்ட நேரம் வெளியிலில் நிற்கவைத்து பின்னர் சாவகாசமாக நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிலர் நிவாரணப் பொருட்களை வா வாங்காமலே வீடுதிரும்பியதாக கூறப்படுகிறது.
இதுஒருபுறம் இருக்க, சமூக இடைவெளியை பின்பற்றாமல் போட்டி போட்டுக் கொண்டு நிவாரண பொருட்களை மக்கள் வாங்கினர். முன்பே முறையான ஏற்பாட்டை செய்யாத அ.தி.மு.கவினரால்,முந்திக்கொண்டு நிவாரண பொருட்களை வாங்கியவர்களை போலிஸார் கலைக்க முயன்றும் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
தங்களது சுய விளம்பரத்திற்காக சமூக இடைவெளியை பின்பற்றாமல் நிவாரணம் வழங்கிய அ.தி.மு.க மற்றும் அமைச்சரால் கொரோனா நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.