தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 710 பேர், 37 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் பிலிப்பைன்ஸில் இருந்து வந்தவர்கள் 5 பேர், லண்டனில் இருந்து வந்தவர்கள் 7 பேர் என 759 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 512 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் 7,491 பேர் நீங்கலாக, 7915 பேர் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமீப வாரங்களை ஒப்பிடுகையில் இன்று குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை வெகுவாக (363) குறைந்துள்ளது. தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதேவேளையில், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது.
இன்று மட்டும் தமிழகத்தில் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள், இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்த ஐவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 624 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மொத்தமே இன்று 11 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தின் மொத்த பாதிப்பில் சென்னையின் பாதிப்பு மட்டுமே 63.49 சதவிகிதமாக உள்ளது.