கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முலுவதும் 144 தடைபிறப்பிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய கடைகளைத் தவிர டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த ஏழு மற்றும் எட்டாம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு மது பிரியர்களை வரிசையில் அனுப்ப அரசு அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு ஏற்பாடு செய்திருந்தது. இருப்பினும் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதவே சமூக இடைவெளி என்பதை கடைப்பிடிக்க முடியாமல் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் திணறி வந்தனர்.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு வந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதை எதிர்த்து தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறி டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்கக் கோரி மேல்முறையீடு செய்தது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு எந்த தடையுமில்லை என தெரிவித்த பிறகு இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
கடலூரில் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு காலை 7 மணி முதல் மதுப் பிரியர்கள் குவிந்தனர். அவர்களுக்கு டாஸ்மாக் கடை சார்பாக 500 நபர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
அதிகாலையிலேயே டோக்கன் பெற்ற நபர்கள் டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள காலி இடத்தில் சமூக இடைவெளியைக் கடைபிடித்தவாறு அமர வைக்கப்பட்டனர்.
கையில் நாளிதழ்களுடன் கடைத் திறப்புக்காக வரிசையில் அமர்ந்திருந்த குடிப்பிரியர்கள், வெயில் அதிகமாகவே கையில் கொண்டு வந்த குடைகளை பிடித்தவாறு காத்திருந்த காட்சி சுவாரஸியமாக இருந்தது. பின்னர் கடை திறந்தபின் ஒவ்வொரு நபராக அனுமதிக்கப்பட்டு கடையில் மது விற்பனை துவங்கியது.
இந்நிலையில் கொடுக்கப்பட்ட டோக்கன்களுக்கு அதிகமாகவே ஆட்கள் வரத் தொடங்கினர். இதுகுறித்து விசாரித்தபோது, சிலர் தங்கள் கையில் கலர் ஜெராக்ஸ் எடுத்த போலி டோக்கன்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலி டோக்கன் வைத்திருந்த 10 பேரை பிடித்து கைது செய்து கலர் ஜெராக்ஸ் எப்படி வந்தது என்று விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் போலி டோக்கன்கள் தலா ரூ.200க்கு விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
டாஸ்மாக் போலி டோக்கன் அச்சடித்து விற்கப்பட்ட இச்சம்பவம் கடலூர் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.