தமிழ்நாடு

“துணிச்சல்மிக்க சுயமரியாதைக்காரர் பா.மீனாட்சிசுந்தரம் மறைவு ஈடு இணையற்ற இழப்பு ” - மு.க.ஸ்டாலின் இரங்கல்!

ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினருமான பாவலர் க.மீனாட்சி சுந்தரம் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“துணிச்சல்மிக்க சுயமரியாதைக்காரர் பா.மீனாட்சிசுந்தரம் மறைவு ஈடு இணையற்ற இழப்பு ” - மு.க.ஸ்டாலின் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினருமான பாவலர் க.மீனாட்சி சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பு வருமாறு :

“தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் சட்ட மேலவை ஆசிரியர் தொகுதி உறுப்பினருமான அய்யா பாவலர் க.மீனாட்சிசுந்தரம் அவர்கள் மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கும் - துன்பத்திற்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடக்க காலத்திலிருந்து திராவிட இயக்க சிந்தனைச் சுரங்கமாகத் திகழ்ந்த அய்யா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்பிற்கும் - பாசத்திற்கும் - அரவணைப்பிற்கும் உரியவர்.

தனது பிறந்தநாள் என்றால் முத்தமிழறிஞர் அவர்களிடம் தவறாமல் வாழ்த்துப் பெறும் அவர் - ஆளுங்கட்சியாக இருந்தாலும் - எதிர்க்கட்சியாக இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் - அதைவிட உயிருக்கு உயிரான கலைஞர் பக்கம் எப்போதும் அசைத்துப் பார்க்க முடியாத எஃகுத் தூணாக நின்றவர். என்மீது தனிப்பட்ட அன்பும் அக்கறையும் கொண்டிருந்தவர்.

ஆசிரியர்களுக்காகவும் - அரசு ஊழியர்களுக்காகவும் தனது வாழ்வினை ஒட்டுமொத்தமாக அர்ப்பணித்துக் கொண்ட அவர், “அமைச்சர்களின் பிள்ளைகளும் அரசுப் பள்ளிகளில் படிக்க வேண்டும் என்பதைச் சட்டமாக்க வேண்டும்” என தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர்.

“துணிச்சல்மிக்க சுயமரியாதைக்காரர் பா.மீனாட்சிசுந்தரம் மறைவு ஈடு இணையற்ற இழப்பு ” - மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்ட கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இறுதி மூச்சுவரை போராடியவர்.

“பாவலர்” என்று அனைவராலும் பாசத்துடன் அழைக்கப்படும் அய்யா அவர்கள், தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களின் சுவாசக்காற்றில் இரண்டறக் கலந்தவர். அவர்களது கோரிக்கைகளுக்கு எந்த அரசையும் எதிர்த்து - ஏன், அது தி.மு.க. அரசாக இருந்தால் கூட தயங்காமல் ஓங்கிக் குரல் கொடுக்கும் துணிச்சல் மிகுந்த சுயமரியாதைக்காரர்.

ஆசிரியர்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி - அப்பழுக்கற்ற கொள்கைக் குன்றாகக் கடைசி வரை திகழ்ந்தவர்.

“ஜாக்டோ- ஜியோ” அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக - ஆட்சியிலிருப்போருக்கு ‘சிம்ம சொப்பனமாக’ இருந்தவர்.

மதிப்பிற்குரிய பாவலர் அய்யாவின் மறைவில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்களிடமிருந்த “கலங்கரை விளக்கை” இழந்து - ஈடுசெய்ய முடியாத பேரிழப்பைச் சந்தித்துள்ளார்கள்.

நானோ, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரமிக்க வீரரை இழந்து சோகத்தில் மூழ்கியிருக்கிறேன்; சொல்வதற்கு ஆறுதல் வார்த்தைகள் இன்றித் தவிக்கிறேன்.

பாவலர் அய்யா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் - உறவினருக்கும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

banner

Related Stories

Related Stories