கொரோனா வைரஸ் காரணமாக மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணை ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆலையின் நிலவரம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக நிர்வாக இயக்குநர் வள்ளலால் கூறியிருப்பதற்கு பால் முகவர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றிய ஊழியர்கள் சிலருக்கு கொரானா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் அங்கே பணியாற்றி வரும் ஊழியர்கள் அச்சமடைந்து பணிக்கு வராததால் ஆவின் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு அது பால் விநியோகத்திலும் எதிரொலித்து வருகிறது.
மேலும் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு முறையான கொரானா பரிசோதனை மேற்கொள்ளாமலும், அவர்களுக்கு கையுறை, முகக்கவசம் வழங்காமலும் ஆவின் நிர்வாகம் மெத்தனமாக செயல்பட்டு வருவதை எங்களது சங்கத்தின் சார்பில் கண்டித்திருந்ததோடு, ஊழியர்களுக்கு முகக்கவசம், கையுறை வழங்காமல் மெத்தனமாக நடந்து கொண்ட ஆவின் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் மாதவரம் ஆவின் பால் பண்ணை கோயம்பேடு காய்கனி சந்தையாக மாறி தமிழகத்தின் மற்றொரு கொரானா தொற்று மையமாகி விடக் கூடாது என்பதால் அதனை மூடி குறைந்தபட்சம் ஒரு வார காலத்திற்கு விடுமுறை அளித்து சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும், அங்கே பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரானா பரிசோதனை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம்.
ஆனால் ஆவின் நிர்வாக இயக்குனர் வள்ளலார் அவர்களோ ஆவின் பால் விநியோகம் குறித்து பொய் பிரச்சாரம் பரப்பப்படுவதாகவும், பொதுமக்கள் அதனை நம்ப வேண்டாம், தொடர்ந்து ஆவினுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கொரானா நோய் தொற்று அறவே கிடையாதா..? , அங்கே பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு இதுவரை முழுமையான கொரானா பரிசோதனை செய்யப்பட்டுள்ளாதா..? அத்துடன் அனைத்து ஊழியர்களுக்கும் முறையான கொரானா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா..?
பால் பண்ணைகளுக்கு பால் கொண்டு வரும் டேங்கர் லாரிகள், பால் பண்ணையில் இருந்து பால் ஏற்றிச் செல்ல வரும் வாகனங்கள் என அவை அனைத்தும் முறையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அதன் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனரா..? என்பதை ஆவின் நிர்வாக இயக்குனர் வள்ளலார் அவர்கள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.
ஆவின் நிர்வாக இயக்குனர் வள்ளலார் அவர்கள் சொல்வது போன்று பொய்யான தகவல்கள் பரப்பப்படுவது உண்மை என்றால் பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களை மாதவரம் ஆவின் பால் பண்ணைக்கு உள்ளே அனுமதித்து அங்கே நடைபெற்று வருவதை மறைக்காமல் மக்களுக்கு நேரிடையாக தெரிவிக்க வேண்டிய கடமையும் அவருக்கு இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் ஈகோ பார்த்துக் கொண்டு உண்மையை மூடி மறைக்க அவர் நினைப்பாரேயானால் தமிழகத்தில் கொரானா நோய் தொற்று மையமாக ஆவின் பால் பண்ணை மாறுவதற்கு அவரே முழு பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.