கொரோனா காலத்தில் தமிழகத்தின் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. நோய் தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழக 4 வது இடத்திற்கு வந்துள்ளது. கொரோனா ஊரடங்கால் தொழில்கள் முடங்கி பெரும் பொருளாதார சரிவை தமிழகம் சந்திக்கிறது.
இந்தநிலையில், மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசிடம் இருந்து கேட்டு பெற்று ஆட்சி செய்வதைவிட்டுவிட்டு, உணவுக்கே வழியில்லாமல் அல்லல்படும் சமயத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்து அதன் மூலம் கல்லாவை கட்டும் ஒரு மோசமான முடிவை எடப்படியார் அரசு கையில் எடுத்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்த கொரோனா பாதிப்பிற்கு மக்கள் கூட்டமாக கூடியதும் ஒருவகையான காரணம் என கூறப்படும் நிலையில், டாஸ்மாக் கடைகளை திறந்து மேலும் பல்லாயிரக் கணக்கானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாக்கவே இந்த அரசு ஏற்பாடு செய்வதாக தமிழக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும், அ.தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் தனிமனித இடைவெளி கடைபிடித்து, கருப்பு சட்டை அணிந்து, கருப்பு கொடி ஏந்தியவாறு அனைவரும் அவரவர் வீட்டு வாயிலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ட்விட்டரில் எடப்பாடி அரசின் இந்த மோசமான நடவடிக்கையை கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிராக ட்விட்டரில் ‘#குடிகெடுக்கும்_எடப்பாடி’ என்ற ஹேஸ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.
டாஸ்மாக் கடைகள் திறப்பது பல குடும்பங்களை இந்த ஊரடங்கு காலத்தில் மேலும் வறுமைக்கு தள்ளி இக்கட்டான சூழல் ஏற்பட காரணமாகிவிடும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.