தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக அன்றாடம் தொழில் செய்து பொருள் ஈட்டும் ஏழை எளிய மக்கள் சொல்லொனாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். வேலையில்லாமல், உணவு உண்ணாமல் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல், சமூகநலக் கூடங்களிலும், பள்ளிகளிலும் பல்வேறு பகுதிகளில் அடைந்து கிடக்கிறார்கள். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மக்களின் நலன் கருதி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தலைவர் மு.க.ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ எனும் திட்டத்தைத் தொடங்கினார். அதன் மூலம் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நேரடியாகச் சென்று நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தி.மு.க தலைவரின் உத்தரவின் பேரில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் முழுவீச்சில் நிவாரணப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழகம் முழுவதும் நிவாரண பணி நடந்துவரும் நிலையில் தி.மு.க மூலம் பலன் பெற்ற பலரும் தி.மு.க தலைவருக்கு தங்களது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் மத்தியில் தி.மு.கவினருக்கு குவியும் வாழ்த்துக்களையும் ஆதரவுகளையும் சகித்துக்கொள்ள முடியாத அ.தி.மு.க பல்வேறு சதிகள் மூலம் தி.மு.கவினர் மீது களம் ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிக்கின்றனர். குறிப்பாக முறையாக சமூக இடைவெளியை பின்பற்றி நிவாரணம் வழங்கும் தி.மு.கவினர் மீது ஊரடங்கை மீறியதாகவும், சமூக இடைவெளியையைக் கடைபிடிக்காமல் நிவாரணம் வழங்கியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.கவினர் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 750 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சிதம்பரம் நகரத்தின் தெற்கு வீதியில் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நிற்க வைத்து ஒவ்வொருவராக அழைத்து அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.
இதைப் பொறுத்துக் கொள்ளாத அ.தி.மு.க-வினர் அரசியல் காழ்புணர்ச்சி காரணத்தால் சிதம்பரம் நகர செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார், நிர்வாகிகள் ஜேம்ஸ் விஜயராகவன், சந்திரசேகரன் உள்ளிட்ட 10த்திற்கும் மேற்பட்ட தி.மு.க நிர்வாகிகள் மீது பொய் வழக்குபதிவு செய்துள்ளனர்.
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நிகழ்ச்சி நடத்தியதாக அ.தி.மு.கவினரின் தூண்டுதலின் பேரில் சிதம்பரம் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்வதாக தி.மு.க-வினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கொரோனா ஊரடங்கில் உணவில்லாமல் தவிக்கும் எங்களுக்கு நிவாரணம் வழங்கிய தி.மு.கவினர் மீது பொய் வழக்கு பதிவதா? என தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.