கரூர் மாவட்டம் மூக்கனாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். கட்டடவேலை செய்து தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒருமாதம் வேலை இல்லாமல் கடுமையான பொருளாதார சூழலில் குடும்பத்தை நகர்த்தி வந்துள்ளார்.
வேலையில்லாத காரணத்தால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை இதனால் வீட்டின் உரிமையாளர் வீட்டைக் காலி செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். உரிமையாளரின் தொடர் வற்புறுத்தல் காரணமாக நாகராஜன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டைக் காலி செய்து வெளியேறினார்.
இந்த சூழலில் தங்குவதற்கு இடமில்லாததால் வெள்ளியணை செல்லும் சாலையின் ஒரு ஓரத்தில் பொருள்களுடன் தங்கினார். இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் வெள்ளியணைக் காவல்துறைக்கு இதுதொடர்பாக தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்குவந்த போலிஸார் சாலையோரத்தில் தங்கியிருந்த நாகராஜனிடம் சம்வத்தை கேட்டறிந்து, பின்னர் வீட்டு உபயோகப் பொருட்களுடன் லாரியில் சென்று வீட்டின் உரிமையாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தி தங்க வைக்க ஏற்பாடு செய்துக் கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவருக்கு தேவையான உதவிகளை செய்ய ஏற்பாடு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.