தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,323 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைககளை கண்காணிக்கவும், சிகிச்சை முறைகள் தொடர்பாக ஆராய்ந்து வழிகாட்டவும் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகள் குறித்தும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவக் குழுவினர் “கொரோனா வைரஸ் நீண்டநாள் நம்முடன் இருக்க வாய்ப்புள்ளது. கூட்டம் கூடுவதை அனுமதிக்க முடியாது. கொரோனா பரவலை தடுக்க நம்முடைய வாழ்க்கை முறையையே மாற்றவேண்டும்.
தமிழகத்தில் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை. கொரோனா தாக்கத்தைப் பொறுத்தே ஊரடங்கை ஒவ்வொரு பகுதியாக படிப்படியாக தளர்த்த முடியும்.
பெருவாரியான சோதனை, தொற்றுள்ளவர்களைக் கண்டறிவது, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுடன் சமுதாய ஆதரவும் தொடர்ச்சியாகத் தேவை. நாம் அனைவரும் சேர்ந்துதான் இந்த நோயை வெல்லமுடியும்” எனத் தெரிவித்துள்ளனர்.