கிருஷ்ணகிரிக்கு வந்து சென்ற மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி நகர்ப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்படுகிறது.
நேற்று வரை தமிழகத்திலேயே கொரோனா தொற்று ஏற்படாத மாவட்டமாக இருக்கும் கிருஷ்ணகிரியில் இன்று 11 பேருக்கு இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி நகர்ப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் உத்தரவையடுத்து, தமிழத்தில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு முன்னதாக கொரோனா பாதித்துள்ள இடங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்ற மூன்று வகையில் பாதிப்பைப் பொறுத்து நிறம்பிரித்தது தமிழக அரசு.
தமிழகத்தில் 7 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், மற்றவை சிவப்பு மண்டலமாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விழுப்புரத்தில் இருந்து விடுப்பில் வந்து கிருஷ்ணகிரியில் தங்கிச் சென்ற மருத்துவர் ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மருத்துவரின் மனைவி, தந்தை உட்பட உறவினர்கள் 11 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரே ஒரு பச்சை மண்டல பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் இருந்து வரும் நிலையில், இன்று கிருஷ்ணகிரி நகர்ப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.