கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் இந்தியாவில் நாள் தோறும் அதிகரித்து வரும் வேளையில் ஊரடங்கை மே 3ம் தேதிக்கு பிறகு நீட்டிக்க மத்திய மாநில அரசுகள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
அவ்வாறு நீட்டிக்கப்பட்டால் தினமும் வேலை செய்தால் மட்டுமே சாப்பாட்டுக்கே வழி கிடைக்கும் என்ற விளிம்பு நிலையில் உள்ள மக்கள் மிகப்பெரிய இன்னலுக்கு ஆளாவார்கள். அரசு தரப்போ, ஏழைத் தொழிலாளர்களுக்கான நிவாரணங்களை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு நிதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என வாய்ப்பந்தல் மட்டுமே போட்டு வருகின்றன.
உண்மையில், புலம்பெயர்ந்த, தினக்கூலி தொழிலாளர்களுக்கு என மத்திய மாநில அரசுகள் ஏதும் செய்திடவில்லை என்பதே நிதர்சனம். தன்னார்வலர்கள் சார்பாக அவ்வப்போது உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கான நிதிகளை மத்திய பா.ஜ.க அரசு வழங்குவதிலும் பாரபட்சம் காட்டி வருகிறது.
தமிழகத்திலும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு 1937 ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரியை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் 22 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களை விட, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது.
இப்படி இருக்கையில், தமிழகத்தில் ஆட்சி புரிந்துவரும் அ.தி.மு.க அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வெறும் 9 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை காட்டிலும் குறைந்த அளவிலான பாதிப்புகளை கொண்ட கேரள மாநிலம் 80 ஆயிரம் கொடியும், சட்டீஸ்கர் 30 ஆயிரம் கோடியும் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் கேட்டுள்ளது.
அதேபோல, மகாராஷ்டிரா அரசு 50 ஆயிரம் கோடி நிவாரணம் கோரியுள்ளது. ராஜஸ்தான் 40 ஆயிரம் கோடியும், மேற்கு வங்கம் 25 ஆயிரம் கோடி ரூபாயும் கோரியுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள 5 மாத ஜி.எஸ்.டி இழப்பீட்டையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் இந்த மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
பாதிப்புகள் குறைவாக உள்ள சிறு மாநிலங்களே அதிகபடியான நிவாரண நிதியை கேட்டிருக்கும் போது, நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வெறும் 9000 கோடி ரூபாய் மட்டுமே எடப்பாடியின் அ.தி.மு.க அரசு கேட்டுள்ளது. அதிலும், இதுவரையில் சுமார் 1900 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தால் மாநிலத்தின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்துக்கொள்ள முடியும் என கூறிவிட்டு, மக்களின் தேவைகளுக்கு பதில் தங்களுடைய தேவைகளையே அ.தி.மு.க அரசு கேட்டு பெற்று வருகிறது என்பதில் ஐயப்படும் இல்லை என இதன் மூலம் தெளிவாகவே தமிழக மக்களுக்கு புரிந்துள்ளது.