உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் உலக வழக்கங்களையும் நடைமுறைகளையும் மாற்றியமைத்துள்ளது. பெரும் தொற்று என அஞ்சி நடுங்க வைக்கும் கொரோனா அவ்வப்போது மனித குலத்திற்கு ஏதேனும் சில நன்மைகளைச் செய்துவருகிறது.
குறிப்பாக, இயற்கையின் போக்கை மீண்டும் செழிக்கவைத்து சுற்றுச்சூழல் மாசை சீர் செய்துள்ளது. அதுமட்டுமின்றி, ஏழை - பணக்காரன் என்ற பேதமையை உடைத்துள்ளது. மக்களிடையே மனிதநேயத்தை மேலோங்க வைத்துள்ளது.
சிறு - பெரு தொண்டு நிறுவனங்கள் முதல் நடுத்தர மக்கள் வரை கொரோனா காலத்தில் தங்களால் முடிந்த உதவிகளை ஏழை எளிய மக்களுக்குச் செய்து வருகின்றனர். அந்த வகையில் விவசாய விளைபொருட்களைச் சந்தைக்கு கொண்டுசென்றும் உரிய விலையில் விற்க முடியாத சூழலில் பண்டைய முறையான பண்டமாற்று முறைக்கு மாற்றியுள்ளனர் மக்கள்.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே செட்டித்திருக்கோணம் கிராம மக்கள் தற்போது பண்டமாற்று முறையைக் கடைபிடித்து வருகின்றனர். பெரும்பாலும் ஊரடங்கால் பணம் இல்லாத சூழலில் மக்கள் இருப்பதால், விலையேற்றத்தை சமாளிக்க முடியாததால் தங்களிடம் உள்ள அத்தியாவசிய பொருட்களை அக்கம்பக்கத்தினரிடம் கொடுத்து அதற்கு பதில் தங்களுக்கு தேவைப்படும் பொருளை அந்த கிராம விவசாய மக்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
அதுமட்டுமல்லாது இதில் இடைதரகருக்கு பணம் கொடுக்கவேண்டாம்; விளைபொருளுக்கு ஏற்ற பொருட்கள் கிடைக்கிறது. இதனால் பண்டமாற்று முறையை கிராம மக்கள் மகிழ்ச்சியோடு கையாண்டு வருகின்றனர். ஊரடங்கில் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும் என்ற வாழ்வியலை இம்முறை சொல்லித் தருவதாக கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.