கள்ளக்குறிச்சியில் ஊரடங்கின்போதே மது போதையில் பெண் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க பிரமுகரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், சிலர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையின்றி வெளியில் சுற்றித் திரிகின்றனர்.
ஊரடங்கு காலத்தில் கள்ளக்குறிச்சியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்த அ.தி.மு.க பிரமுகர், பெண் காவலரிடம் தகறாறு செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க விவசாய அணி செயலாளராக உள்ளார் கதிர் தண்டபாணி. இவர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்தவர்.
கதிர் தண்டபாணி , நேற்று பிற்பகலில் கள்ளக்குறிச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனது நான்கு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது மாண்டூர் சுங்கச்சாவடியில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ மணிமேகலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்.
காரில் வந்த அ.தி.மு.க பிரமுகர் கதிர் தண்டபாணியின் காரை நிறுத்தி அனுமதிச்சீட்டு உள்ளிட்ட விவரங்களைக் கேட்டிருக்கிறார் எஸ்.ஐ மணிமகேலை. அப்போது அவர் அருந்தியிருப்பது தெரிய வந்ததால் ஊரடங்கு அமலில் உள்ளபோது உங்களுக்கு எங்கிருந்து மது கிடைத்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு, “உன்கிட்ட பதில் சொல்லமுடியாது. நான் பதில் சொல்லிக்கிறேன்” எனத் தொடர்ந்து எல்லை மீறிப் பேசியவாறு, வண்டியை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
அனுமதி இன்றி ஊரடங்கு காலத்தில் பயணித்ததோடு மட்டுமின்றி, மது போதையிலும் வாகனத்தை இயக்கி, போலிஸாரை மதிக்காமல் ஆளுங்கட்சி எனும் அதிகார மமதையில் அத்துமீறியுள்ளார் அ.தி.மு.க பிரமுகர் கதிர் தண்டபாணி.
அவர் போலிஸாரிடம் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரது இந்தச் செயலை பலரும் கண்டித்துள்ளனர்.