ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தேர்தல் களத்தின் வெற்றி-தோல்விகளைக் கடந்து மக்களுடன் பயணிக்கும் ஜனநாயக இயக்கம் தி.மு.க எனக் குறிப்பிட்டு உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அந்த மடல் பின்வருமாறு :
“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து நம் நாட்டைக் காப்பாற்றிட நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்த விழிப்புணர்வைச் சட்டமன்றம் தொடங்கி மக்கள் மன்றம் வரை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறது, திராவிட முன்னேற்றக் கழகம். அதனை அலட்சியப்படுத்திய ஆளுந்தரப்பு, அதனை மறைத்திட, நம்மை நோக்கி அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டி, நிலைமையைத் திசை திருப்பலாம் என நினைக்கிறது. அதற்கு சில பத்திரிகைகளும் துணை போகின்றன.
அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டச் சொன்னபோது அதனை அரசியல் என வர்ணித்தது, தி.மு.கழகம் நடத்திய தோழமைக் கட்சிகள் கூட்டத்திற்கு தடை விதித்தது, கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தன்னார்வலர்களும் வழங்கும் உதவிகளுக்குத் தடை விதிக்க முயன்றது, அரசின் "அம்மா உணவகத்தை" அ.தி.மு.க.,வினர் நடத்தும் கேண்டீன் போல மாற்றியிருப்பது என, இந்தப் பேரிடர் நேரத்திலும் மக்கள் நலனை நினைக்காமல், மலிவான அரசியல் செய்வது யார் என்பதைத் தமிழகம் அறியும்.
ஊழல் வைரஸ் பீடித்துள்ள இந்த ஆட்சியாளர்களால் உண்மைகளை மூடி மறைக்க முடியாது என்பதை, ஒவ்வொரு நாளும் அதிகரித்துவரும் நோய்த்தொற்று அபாயம் உணர்த்திக் கொண்டிருக்கிறது.
நேற்றைய (21-4-2020) நிலவரப்படி புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்ட 76 பேருடன் மொத்த எண்ணிக்கை 1596 என உயர்ந்திருப்பது வேதனையளிக்கிறது. நோய்த் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களே, அதனால் பாதிக்கப்பட்டு, உயிரிழக்க நேரிடுவதையும், அவர்களின் உடல்களை மயானத்தில் புதைக்கவோ எரிக்கவோ முடியாத அசாதாரண சூழல் நிலவுவதையும் இதயம் உள்ள எவரும் ஏற்க முடியாது.
மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப்பணியாளர்கள் என, மக்கள் நலன் காக்க அர்ப்பணித்துள்ளோருக்கு உரிய பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்படவில்லை என்பதை நாம் மட்டுமல்ல, நாட்டு நலனில் அக்கறையுள்ள ஊடகத்தினரும் சுட்டிக்காட்டினர். தற்போது, ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நோய்த்தொற்று பரவியுள்ள நிலையில், அரசாங்கம் விரைந்து கூடுதல் விவேகத்துடன் செயல்படவேண்டும்.
ஆனால், விரைவு பரிசோதனைக் கருவியே சரியாகச் செயல்படவில்லை என்ற செய்திகள் மேலும் கவலையடையச் செய்கின்றன. நாம் கவலைப்படுமளவுக்கு ஆட்சியாளர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பிற மாநிலங்களைவிட கூடுதல் விலை கொடுத்துக் கருவிகளை வாங்கி, பேரிடர் காலத்திலும் ஊழலில் திளைக்கவே நினைக்கிறார்கள்.
ஆட்சி அவர்களிடம் சிக்கிக் கொண்டிருந்தாலும், மக்கள் நம்பியிருப்பதும் எதிர்பார்ப்பதும் நம்மிடம்தான். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்கள் மன்றத்தில் அவர்களின் உள்ளத்தை ஆளும் கட்சியாக தி.மு.கழகமே இருக்கிறது என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை மக்கள் அளித்த தீர்ப்புகளினால் உணர முடிகிறது. மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கேற்ப இந்தப் பேரிடர் காலத்திலும் நாம் செயல்பட்டு வருகிறோம்.
ஊரடங்குக்கு முன்பிருந்தே கொரோனா விழிப்புணர்வையும் - உதவிகளையும் முதலில் தொடங்கிய இயக்கமான தி.மு.கழகம், ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும் தொடர்ந்து களத்தில் இருக்கிறது. கழக நிர்வாகிகள், கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருடன் அடிக்கடி காணொளிக் காட்சி வாயிலாக உரையாடிக் கொண்டிருக்கிறேன். ஆட்சியாளர்களின் காழ்ப்புணர்ச்சி மிக்க, அப்பட்டமான அரசியல் கலந்த நடவடிக்கைகளைக் கடந்து, தோழமை சக்திகளுடனான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் காணொளி வாயிலாகவே நடத்தி, கொரோனா நோய் எதிர்ப்புப் பணியில் முன் வரிசை வீரர்களாகச் செயல்படுவோருக்கும் பொதுமக்களுக்கும் தேவையானவற்றை வலியுறுத்தி தீர்மானங்களை நிறைவேற்றினோம். களத்தில் நம் பணியை மேலும் சிறப்பாக எப்படித் தொடர்வது என்பதற்கும் வழிவகுத்தோம்.
நாள்தோறும் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் அவரவர் மாவட்டம்- தொகுதிகளில் உள்ள மக்களின் நிலை - அவர்களுக்கான உதவிகள் குறித்த நமது செயல்பாடுகள் ஆகியவற்றைக் கேட்டறிந்து வருகிறேன். எங்கே யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயல்படும் பணியினை தி.மு.கழகத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள். அந்தப் பணியின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருப்பதுதான் ‘ஒன்றிணைவோம் வா’ என்கிற புதிய செயல்பாட்டுத் திட்டம். எட்டுத்திசைகளிலும் மேற்கொள்ளப்படும் பணிகளை ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைத்து, தேவையுள்ளோர் அனைவருக்கும் உதவிக்கரம் எட்டிட, ஒற்றைப்புள்ளியிலிருந்து விரிவான - விரைவான செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என்பதே இந்தச் செயல்திட்டத்தின் நோக்கமாகும்.
ஏப்ரல் 20-ஆம் நாள் காணொளி வாயிலாகக் கழக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் என 200-க்கும் மேற்பட்டோரிடம் இந்தத் திட்டம் குறித்து விளக்கி, ஆலோசித்தேன். ‘ஒன்றிணைவோம் வா’ என முன்னெடுக்கப்படும் இந்தச் செயல்திட்டத்தின் முக்கிய நோக்கம்; பசியாற்றி பட்டினிச்சாவைத் தடுப்பதே!
ஏழை-எளியோர், எதுவும் இல்லாதோர் ஆகியோர் ஊரடங்கால் வேலையின்றி-வருமானம் இழந்து தவித்திடும் நிலையில், அவர்களின் பசியாற்றும் அமுதசுரபியாக கழகத்தின் செயல்பாடு அமைந்திட வேண்டும்.
பிறர் துன்பம் கண்டு இரங்கிடும் மனம் வேண்டும் என்பதைத் தமிழ்ப் பண்பாடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில், நம் அருகில் வசிப்போருக்கு வழிகாட்டுதலும் ஆதரவு வழங்குவதும் இந்தச் செயல்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதுமட்டுமின்றி, உதவி செய்திட முன்வரும் நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்து மக்களின் தேவைகளைத் தீர்த்திட உதவுவதும் நமது செயல்திட்டமாகும். இவையனைத்துக்கும் முக்கியமாக, இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள உதவி எண் (Helpline Number) குறித்து கழக நிர்வாகிகளிடம் தெரிவித்ததை, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களிடம் உங்களில் ஒருவனான நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
தமிழர்கள் எங்கு துயர்ப்பட்டாலும் இந்த எண், அவர்களுக்கான உதவிக்கரமாக நீளும்.
ஊரடங்கு நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தே, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்தும் உதவி கோரி தொடர்ச்சியாக அழைப்புகள் வந்தபடியே இருந்தன. வெளிமாநிலங்களுக்குச் சென்ற தமிழர்கள் அங்கே சிக்கித் தவிப்பது குறித்து பலரும் என்னைத் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அதுபோல, தமிழகத்தில் சிக்கியுள்ள பிறமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவிடும்படியும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. மருத்துவப் பணியாளர்களுக்கு உரிய முறையிலான பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்படுவதில்லை என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. இயன்றவரை இது குறித்து அக்கறையெடுத்துச் செயல்பட்டு, அவர்களுக்கான உதவிகள் கிடைத்திடவும், சொந்த ஊருக்குத் திரும்பிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இப்போதும் அத்தகைய உதவிகள் தேவைப்படுவோர் தொடர்ந்து அழைத்தவண்ணம் இருக்கிறார்கள். பல பகுதிகளிலிருந்தும் வருகின்ற அழைப்பினை ஒற்றைப் புள்ளியில் ஒருங்கிணைக்கவும், உரிய முறையில் செயல்படுத்தவும் மக்களுக்கான உதவி எண்ணான 90730 90730 என்ற அலைபேசி எண் வாயிலாக, என் கவனத்திற்கு அவரவர் தேவைகளை - நெருக்கடிகளைக் கொண்டு வர முடியும்.
உணவு, குடிநீர், மருத்துவ உதவி, அத்தியாவசியத் தேவைகள் குறித்து என் அலுவலகத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள இந்த எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.
உதவி கேட்டு முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தையும் உடனுக்குடன் பரிசீலித்து, உரிய முறையில் நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
மக்களின் கோரிக்கைகளை உணவு, மருத்துவம், பிற உதவிகள் வழங்குதல் என வகைப்படுத்தி, அந்தந்த மாவட்டங்கள் - தொகுதிகளில் உள்ள தி.மு.கழக நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்படும். கள நிலவரம் அறிந்த நமது நிர்வாகிகளும், மக்கள் பிரதிநிதிகளும் உடன்பிறப்புகளாகிய உங்களின் துணையுடனும் பங்கேற்புடனும் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிடுவார்கள். அப்படி நிறைவேற்றப்பட்டபிறகு, அது குறித்த தகவலும் நமக்குக் கோரிக்கை வைத்தவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
144 தடையுத்தரவு காரணமாகவோ, உள்ளூர் நிலவரம் காரணமாகவோ கழக நிர்வாகிகளால், ஏதேனும் ஒரு கோரிக்கையை நிறைவேற்ற இயலாமல் போனால், அது குறித்து என் கவனத்திற்குக் கொண்டு வரப்படும். அது குறித்து அடுத்த கட்ட நிர்வாகிகள் வாயிலாகவோ அல்லது நானே நேரடியாகவோ தீர்வு காண வழி வகுப்பேன்.
மேலும் நமது முயற்சிகளில், உதவி செய்திட முன்வரும் 'நல்லோர்களை' ஒன்றிணைத்து கூட்டாகச் செயல்பட வேண்டும். இதற்காக www.ondrinaivomvaa.in என்ற வலைதளமும் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரவிருக்கும் 6 முதல் 8 வாரங்கள் வரையிலான காலகட்டத்தில், தமிழக மக்கள் எதிர்கொள்ளும் சமூக - பொருளாதார சவால்களில் அவர்களுக்குத் துணையிருக்கும் வகையில் ஒவ்வொரு உடன்பிறப்பும் தங்கள் அக்கம் பக்கத்தினரைத் தொடர்புகொண்டு, அவர்கள் பெற முடியாமல் இருக்கும் அடிப்படைத் தேவைகளை அறிந்துகொள்ள வேண்டும். அதற்கென அவரவர் ஒரு வாட்ஸ்அப் குரூப்'பினைத் துவங்கி அக்கம்பக்கத்தினரை அதில் இணைத்துக்கொள்ளலாம். இதன்மூலம் அறியப்படும் தேவைகளை, கழக நிர்வாகிகள் கவனத்திற்குக் கொண்டு சென்றும், பொதுமக்களின் உதவி எண் வாயிலாகவும் உரிய நிவாரணம் கிடைத்திடச் செய்ய வேண்டும்.
அதற்காகத்தான், ‘ஒன்றிணைவோம் வா’ என்கிற செயல்திட்டம் ஐந்து கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்களின் உதவி எண்
- நல்லோர் கூடம்
- ஏழை எளியோருக்கு உணவு
- ஸ்டாலினுடன் இணைவோம்
- மெய்நிகர் (Virtual) வட்டாரக் குழுக்கள்
இக்கட்டான சூழலில் ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்து இந்த 5 கட்டங்களின் வாயிலாகப் பேரிடர் காலத்தில் தமிழக மக்களுக்கு உதவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
கழகத்தைப் பொறுத்தவரை திண்ணைப் பிரச்சாரம் முதல் மாபெரும் மாநாடுகள் வரை அனைத்துமே கழகத்தின் ஆணிவேர்களான உடன்பிறப்புகளாகிய உங்களின் ஒத்துழைப்புடனும் பங்கேற்புடனுமே வெற்றி பெற்றுள்ளது.
சுனாமி - சென்னை செயற்கை வெள்ளம் - புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தமிழக மக்கள் மீண்டெழுந்ததற்கு ஒட்டுமொத்த மக்களின் உள்ளன்புடன் கூடிய உதவிக்கரமே அடிப்படைக் காரணமாகும். அத்தகைய பேரிடர் காலத்தில், அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தி.மு.கழகம் தனது பங்களிப்பை வேறு எவருக்கும் சளைக்காத வகையில் நிறைவேற்றியதற்குக் காரணம், உடன்பிறப்புகளாகிய உங்களின் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகள்தான். அத்தகைய செயல்பாடுகளை இப்போதும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
இந்தச் செயல்திட்டத்தின் வாயிலாக, தமிழகத்தில் 4 கோடி மக்களைச் சென்றடைய முடியும். இதில் பொதுமக்களின் உதவி எண் வாயிலாக, இரண்டரை லட்சம் குடும்பத்தினரின் பிரச்சினைகளைச் சேகரித்துத் தீர்வு காணவும், 30 லட்சம் ஏழை - எளியோருக்கு உணவளிக்கவும் முடியும். நல்லோர் கூடத்தில் உதவிசெய்யும் மனப்பான்மை கொண்ட நல் உள்ளங்கள் கொண்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நல்லோர்களை நம்முடன் இணைக்க முடியும். மேலும் நமது கழகத்தின் தொண்டர்கள் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை வட்டார வாட்ஸ்அப் குழுக்களால் இணைத்து அவர்களுடைய தேவைகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய முடியும்.
ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தேர்தல் களத்தின் வெற்றி-தோல்விகளைக் கடந்து மக்களுடன் பயணிக்கும் ஜனநாயக இயக்கம் தி.மு.கழகம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற பேரறிஞர் அண்ணாவின் கனவைத் தனது அயராத உழைப்பினாலும் ஆட்சித் திறத்தாலும் நிறைவேற்றிய தலைவர் கலைஞரின் வழியில் அவரது உடன்பிறப்புகளான நாம் இந்தப் பேரிடர் நேரத்தில் செயல்படுவோம்.
உங்களில் ஒருவனான நான் முன் நிற்கிறேன். உங்களோடு இணைந்து நிற்கிறேன். ஒருங்கிணைந்து செயல்படுவோம். உலகை அச்சுறுத்தும் பேரிடரை அறிவியலின் துணையுடனும் ஆக்கபூர்வமான செயல்களாலும் வென்று காட்டுவோம்!”
இவ்வாறு தனது மடலில் குறிப்பிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.