கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கை மீறி வெளியில் சுற்றும் நபர்களை போலிஸார் தொடர் ரோந்து, ட்ரோன் கேமரா ஆகியவற்றின் மூலமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ பயங்கர வைரலானது. அந்த வீடியோவில், திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி போலிஸார், அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பலர் ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக நின்று கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்ததை ட்ரோன் மூலமாகக் கண்காணித்தனர்.
ட்ரோன் கேமராவை பார்த்த அங்கிருந்த நபர்கள் திசைக்கொருவராக தெறித்து ஓடத் துவங்கினர். அதில் ஒரு சிறுவன் கேரம் போர்டை கொண்டு மறைந்து அமர்ந்து கொண்டான். ஆனால் ட்ரோன் கேமரா சுற்றிச் சுற்றி வந்ததால் பயந்து போய் சிறிது தூரம் கேரம் போர்டை தூக்கிக்கொண்டே ஓடி ஒரு கட்டத்தில் அந்த போர்டையும் கீழே வீசிவிட்டு ஓடியதாக அந்த வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் சேலத்திலும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்தேறியுள்ளது. சேலம் நகர மலை அடிவாரப் பகுதியில் ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை தற்போது போலீஸார் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
ட்ரோன் விடாமல் பின்தொடர்வதால் மறைந்துகொள்ள வழியற்று கட்டியிருந்த லுங்கியையே அவிழ்த்து ஒருவர் தன்னை மறைக்க முயற்சிக்கிறார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.