உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனாவின் வீரியம் நாள்தோறும் உயர்ந்து வருகிறது. பிப்ரவரி மாதமே இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தால் இத்தகைய சூழலே ஏற்பட்டிருக்காது என தொடந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
அவ்வாறு செய்யாததன் விளைவாக தற்போது இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஆயினும் ஊரடங்கு அறிவிப்பிலும் திட்டமிடல் என்ற ஒன்றை மத்திய மோடி அரசு கையாளவில்லை. இதன் காரணமாக பசிப்பிணியால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததும், கால்கடுக்க பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்தே சொந்த ஊர்களுக்குச் சென்றதும்தான் நடந்தது.
இப்படி இருக்கையில், கொரோனா நோயாளிகளுக்கு இரவு பகல் பாராமல் சேவையாற்றும் மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும், பாதுகாப்பு உபகரணங்களான மாஸ்க், கையுறை, முழுக்கவச உடை என எதையுமே அரசு அளிக்காமல் உள்ளது. அதன் விளைவாக தமிழகத்தில் மட்டுமே 8 அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும், 5 செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இப்படி இருக்கையில், கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், நோயாளிகளை கையாளும் மருத்துவர்கள் அலட்சியமாக இருப்பதாலேயே அவர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது எனக் கூறியிருந்தார். இதற்கு மருத்துவர்கள் தரப்பில் கடுமையான கண்டனங்களும் எழுந்தன.
இந்நிலையில், தருமபுரி மக்களவைத் தொகுதி தி.மு.க எம்.பி., டாக்டர் செந்தில்குமார், கொரோனா காலத்தில் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்காதது குறித்து அரசுக்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், உரிய பாதுகாப்பு உபகரணங்கள், கவசம் ஏதுமில்லாத காரணத்தால் 8 மருத்துவர்கள் மற்றும் 5 செவிலியர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில், கொரோனா தடுப்பு பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு உணவும், தண்ணீரும்கூட இல்லை.
அதேபோல, போத்தனூரில் கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் எடுக்கும் மருத்துவருக்கு N95 முகக் கவசம் வழங்காததால் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவர் மூலம் செவிலியர் மற்றும் மருத்துவரின் மாமியாருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கெல்லாம் யார் பொறுப்பேற்பது? எனக் குறிப்பிட்டு அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.க., அரசுகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.