பிரதமருடன், காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற அனைத்துக்கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
அப்போது அவர், ஆற்றிய உரையின் விவரம் பின்வருமாறு:
“உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கொரோனா, போர்க்காலங்களைவிட அதிகமான நெருக்கடி நிலையை நம் நாடு சந்தித்துக் கொண்டுள்ளது.
அசாதாரணமான, முன் எப்போதுமில்லாத கடும் சவால்களை நாடு சந்தித்து வரும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தருணத்தில், நமது நாட்டு மக்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு நம் எல்லோருக்கும் உள்ளது.
இவ்வேளையில், நாட்டின் நலம், மக்களின் நல்வாழ்வு, நாட்டின் பொருளாதாரம் அனைத்தையும் காத்திட உறுதிபூண்டு, கணநேரமும் வீணாக்காமல் உரிய நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொண்டு வரும் இந்தியப் பிரதமர் அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அவர்களும், கழகமும் உறுதியாகத் துணை நிற்கும் என்பதையும், மத்திய - மாநில அரசுகள் மேற்கொள்ளும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் அனைத்திற்கும் ஊக்கமுடன் தேவையான ஒத்துழைப்புகளை நல்கும் என்பதை இந்தக் காணொளிக் காட்சியின் வாயிலாக எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது பிரதமர், இந்த மிக முக்கியமான நேரத்தில் ஏற்பட்டு வரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாட்டில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் கருத்துகள் கேட்டு வருவது மிகவும் வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது. பிரதமரைப் போல எங்கள் தமிழக முதல்வரும் - தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், எங்கள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்துகளையும் கேட்டுப்பகிர்ந்து கொண்டு ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.
ஆனால், எங்கள் கழகத் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இதுகுறித்து பல முறை விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வர் நிராகரித்துள்ளார் என்பது மிகுந்த வேதனைக்குரியது. இந்த கொரோனாவைக் கட்டுப்படுத்தி, நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் எடுக்கத் தொடங்கியது முதல் அரசின் நிர்வாகத்துறை அதிகாரிகளும் - மருத்துவர்களும், செவிலியர் உட்பட்ட சுகாதாரத்துறை அலுவலர்களும், பணியாளர்களும், காவல்துறை அதிகாரிகளும் - பணியாளர்களும், உள்ளாட்சித் துறை அலுவலர்களும், அதிகாரிகளும், பணியாளர்களும் - 24 மணிநேரமும், உணவு கொள்ளாமல், உறக்கமின்றி, ஓய்வு சிறிதுமில்லாமல் உழைத்து வருகிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், என் சார்பிலும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் - தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை கொரோனோ ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு வழங்கிட வேண்டுமென்று எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். அதைபோல, எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம் இயங்கும் ‘அண்ணா அறிவாலய’ வளாகத்திலுள்ள 'கலைஞர் அரங்கத்தை' - கொரோனோ ஒழிப்பு நடவடிக்கைக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள திராவிட முன்னேற்றக் கழக அலுவலகங்களையும் - மண்டபங்களையும் கொரோனோ ஒழிப்பு, தடுப்பு நடவடிக்கைகளுக்கு வழங்கி உதவுமாறு மாவட்டச் செயலாளர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.
அதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.கழகத்தின் செயலாளர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தத்தம் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து கொரோனோ ஒழிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பணித்திருக்கிறார். அத்துடன், மாவட்டச் செயலாளர்கள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து, அவரது ஆலோசனைகளையும் - அறிவுரைகளையும் கேட்டு, கொரோனோ ஒழிப்புப் பணிகளில் ஈடுபடவும் வலியுறுத்தியுள்ளார்.
இப்படி, அனைத்து வகைகளிலும் கொரோனோ ஒழிப்புப் பணிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தை முழுமையாக ஈடுபடுத்தி வரும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாக, இந்தக் காணொளிக் காட்சி வாயிலாக பிரதமர் அவர்களுக்கு ஒரு சில வேண்டுகோள்களை முன் வைக்கிறேன்.
* நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டுமென தி.மு.க சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
ஏனெனில், மாநில அரசினால் செய்ய முடியாமல் போன, மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் சில முக்கியமான பணிகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தந்து, மக்களுக்கு மகிழ்ச்சியையும் - மனநிறைவையும் அளிப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த தொகுதி மேம்பாட்டு நிதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்துவது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமைகளையும் பணிகளையும் முடக்குவது போலிருக்கிறது. எனவே, தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்யப்படுவதைக் கைவிடுமாறு எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பில் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
* தமிழகத்தில் 1 லட்சம் பேர் வரை கொரோனோ நோய்த் தடுப்புப் பணியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை கொரோனோ சோதனை செய்யப்படுவதற்கான ஐ.சி.எம்.ஆர். (I.C.M.R) சோதனைக் கருவிகள் போதுமான அளவில் இல்லாத காரணத்தால், இந்த I.C.M.R கருவிகள் அதிகம் கிடைக்க ஆவன செய்து, தனிமைப் படுத்தப்பட்டுள்ளோரிடமும், பிறரிடமும் சோதனை நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட மத்திய அரசு உதவிட வேண்டுகிறோம்.
* தமிழக டாக்டர்களிடம் Personal Protected Equipment - தனிநபர் பாதுகாப்பு சாதனம் இல்லாததால், அவர்கள் எச்.ஐ.வி. நோய்க்கான சாதனங்களைப் பயன்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.
இதன் பொருட்டு, இந்த நெருக்கடி தீர, Personal Protected Equipment - வெண்டிலேட்டர்கள், மாஸ்க் கருவிகளை தமிழகத்திற்கு போதிய அளவில் உடனடியாக வழங்கிட வேண்டுகிறோம்.
* கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை தமிழகத்தில் முழுமையாக நிறைவேற்றுவதற்காகத் தமிழக அரசு கோரியுள்ள 9,000 கோடி ரூபாயை உடனடியாக வழங்கிட வேண்டுகிறோம். மத்திய அரசு, தமிழகத்திற்கு வெறும் 510 கோடி ரூபாயை மட்டும் ஒதுக்கியிருப்பது மிக மிகக் குறைவாகும். மாநில அரசு கேட்ட தொகை ரூபாய் 9,000 கோடியை முழுமையாக வழங்கிட மத்திய அரசை தி.மு.க. சார்பில் வேண்டுகிறேன்.
* அதைபோல, புதுச்சேரி அரசுக்குக் கொரோனோ ஒழிப்புப் பணிகளுக்காக இதுவரை எந்த ஒரு நிதியும் மத்திய அரசினால் அறிவிக்கப்படவில்லை. மத்திய அரசு பாரபட்சமின்றி புதுச்சேரி அரசுக்கும் உடனடியாக நிதி வழங்கிட வேண்டுகிறேன். இதனால், தமிழகத்தையும் - புதுச்சேரியையும் மத்திய அரசு புறக்கணிக்கிறதே எனத் தமிழக மக்கள் எண்ண மாட்டார்களா என்பதைச் சிந்தித்து பாரபட்சமின்றி நிதியை ஒதுக்கிட தி.மு.க. சார்பில் வேண்டுகிறேன்.
* ஈரானில் சிக்கித் தவிக்கும் 300க்கும் மேற்பட்ட மீனவர்களை உடனடியாகத் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களை தாயகத்திற்கு மீட்டுவர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இதுகுறித்து பிரதமர் அவர்களுக்கும் - வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கும் பலமுறை கோரிக்கைகள் வைத்தும் இதுவரை அவர்கள் மீட்கப்படவில்லை. எனவே உடனடியாக நடவடிக்கைள் மேற்கொண்டு அவர்களை தாயகத்திற்கு மீட்டுவர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
* ஏழை - எளிய தொழிலாளர்கள் புலம் பெயர்ந்து வந்து ஆங்காங்கே தங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை முதலியவை தடையின்றி கிடைக்க உதவிட மாநில அரசுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
* ஊரடங்கு நடவடிக்கைகளை நீட்டிக்க விரும்பினால், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் வீதம் இரண்டு தவணைகளில் மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
* கொரோனோ ஒழிப்பில் அயராது போராடி வரும் சுகாதாரப் பணியாளர்கள் - காவல்துறை பணியாளர்கள் - உள்ளாட்சி பணியாளர்கள் என அனைவருக்கும் மூன்று ஊக்க ஊதிய உயர்வுகள் (3 incentivies) உடனடியாக அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
* சிறுகுறு தொழில்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறோம்.
* நிதி நெருக்கடிகளைச் சமாளித்திட 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடம் போன்ற பெரிய திட்டங்களை தற்போது தவிர்க்கலாம் என தெரிவித்துக் கொள்கிறோம்.
* மேலும், கொரோனோ ஒழிப்புத் தடுப்பு நடவடிக்கைகளில் நாடு மும்முரமாக ஈடுபட்டிருக்கும்போது, சிலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, மத வேறுபாடுகளை புகுத்தும் வகையில் பேச முற்படுவதை பிரதமரும், உள்துறை அமைச்சரும் உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகத்தில் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
* இப்படியாக தொடக்கத்தில் நான் குறிப்பிட்டதைப் போல, கொரோனா ஒழிப்புப் பணிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசுக்கும் - மாநில அரசுக்கும் முழு ஒத்துழைப்பு நல்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” என தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.