உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கடந்த இரண்டு வாரத்திற்குள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது.இந்நிலையில் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் வாழ்வாதாரமின்றி கடும் இன்னல்களை சந்தித்துவரும் ஆயிரக்கணக்கான குடும்பத்தினருக்கு தி.மு.கவினர் உதவி செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, தி.மு.க எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் தொகுதியில் உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதி ஒதுக்கியும் மருத்துவ உபகரணங்களையும் வழங்கியும் வருகின்றனர்.
அந்தவகையில், அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 1,03,71,878 ரூபாய் ஒதுக்கியுள்ளார்.
அந்த நிதியில் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வெண்டிலேட்டர் தேவை என்பதை உணர்ந்து 50 வெண்டிலேட்டர் வாங்குவதற்கு அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் வழங்கியுள்ளார். அதேப்போல், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 வெண்டிலேட்டர் வாங்க நிதி ஒதுக்கிய கடிதத்தை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதிக்கு நிர்வாக அனுமதி 28ம் தேதி வழங்கப்பட்டது. பின்னர் நிர்வாகம் வழங்கிய அனுமதியை 31ம் தேதி ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இருந்து கடிதம் வந்துள்ளது.
அந்த கடிதத்தில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரவக்குறிச்சி பகுதிக்கு மட்டும் நிதியை பெற முடியும் என்று கூறி நிதியை மறுத்துள்ளனர். இதனையடுத்து அரவக்குறிச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில்தான் அதிகம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட நிதியை மறுத்துள்ள பரிந்துரை கடித்தை திரும்ப பெற்று நிர்வாகம் அனுமதி வழங்கவேண்டும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவேண்டும் என தி.மு.க எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கடித்தையும் தமிழக தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ளார். தமிழக அரசின் இந்த செயல்பாடுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.