தமிழ்நாடு

“மதுரையில் போலிஸ் தாக்கியதில் 71 வயது இஸ்லாமிய முதியவர் பரிதாப பலி” : காவல்துறை நிகழ்த்திய கொடூரம்!

மதுரையில் போலிஸார் தாக்கியதில் 71 வயது இஸ்லாமியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“மதுரையில் போலிஸ் தாக்கியதில் 71 வயது இஸ்லாமிய முதியவர் பரிதாப பலி” : காவல்துறை நிகழ்த்திய கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா பரவலைத் தடுக்க நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் பொதுமக்கள் பலர் பல இன்னல்களை தினந்தோறும் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது போலிஸார் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்துவது குறித்த வீடியோக்கள் சமீபமாக வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், இளந்தமிழகம் அமைப்பைச் சேர்ந்த ரபீக் ராஜா என்பவரின் தந்தையை போலிஸார் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் அண்ணா நகர் கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்தவர் ரபீக் ராஜா. இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது தந்தை அப்துல் ரஹீம், நிஷா பிராய்லர்ஸ் என்னும் கறிக்கடை நடத்தி வருகிறார். அரசின் உத்தரவை ஏற்று கடையை மூடிவிட்டு சமூக விலகலை முறையாக கடைபிடித்துவந்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் கடையில் உள்ள கோழிகளுக்கு உணவு வைப்பதற்காக அவரது மருமகனை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றுள்ளார். கோழிக்கு உணவு வைத்துவிட்டு கிளம்பும் நேரத்தில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலிஸார் பெரியவர் அப்துல் ரஹீமையும், அவரது மருமகனையும் காரணமே கேட்காமல் தாக்கியுள்ளனர்.

இதனால் காயமடைந்த அப்துல் ரஹீம் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரைப் பரிசோதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஊர் மக்கள் காவல்துறையைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலிஸாரின் தாக்குதலால் முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட இடத்திற்கு துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் போலிஸார் வந்து கலைந்து செல்லுமாறும், ரபீக் ராஜாவின் குடும்பத்தினரிடம் முதியவர் இயற்கையாக உயிரிழந்ததாக கூறச்சொல்லியும் வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால், அவரது குடும்பத்தினர் அதற்கு மறுத்துவிட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. மேலும் தாக்குதல் நடத்திய போலிஸார் மீது வழக்குப் பதிவு செய்யவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories