சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்றைய தேதி வரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது.
இதனால், நேற்று முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு மக்கள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அது போதுமானதாக இல்லை என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 23 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநில மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரை முழுக்க முழுக்க நேற்றைய மோடி பேச்சின் தமிழாக்கமாகவே இருந்தது. எந்த ஒரு புதிய அறிவிப்போ, தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை, தமிழக அரசு சார்பில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது போன்ற எந்தத் தகவலும் இல்லாமல், வெறும் சம்பிராதாயத்துக்காக ஆற்றப்பட்ட உரையாகவே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சித்துள்ளனர்.
அண்டை மாநிலமான கேரளாவில் 109 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனும், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடியும் அவரது அரசும் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக மார்ச் 24 முதல் ஏப்ரல் 1 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், சென்னையில் இருந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்ததால் அங்கு மிகப்பெரிய வைரஸ் பரவல் அச்சுறுத்தல் ஏற்பட்டது. அன்றைய தினம் மட்டும் லட்சக்கணக்கானோர் பேருந்து நிலையத்தில் கூடியதால், வைரஸ் பரவலுக்கு வாய்ப்பிருந்தது.
அதனால் இந்த வைரஸ் பரவி இருக்க வாய்ப்பிருந்தும் இதுவரை தமிழக அரசு அவர்களுக்கு சோதனை செய்ய எந்த ஏற்பாடும் செய்யவில்லை.
உலக நாடுகள் பலவும் தீவிரமாக இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், மோடியும், எடப்பாடியும் இதுகுறித்து எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தின ஊதியத்துக்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் கால்டாக்ஸி ஓட்டுநர்கள் போன்றவர்களுக்கு உதவித் தொகையாக 1000 ரூபாய் கொடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால் அந்த 1000 ரூபாயை வைத்து அவர்களால் என்ன செய்து விட முடியும் என்ற கேள்வி அடிப்படையாகவே எழுகிறது.
அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் கொடுத்தாலும், வீட்டு வாடகை, வாகன இ.எம்.ஐ, மருத்துவ செலவுகளை அவர்கள் சமாளிக்க 1000 ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும்? சிறு குறு தொழில்கள் முடங்கியுள்ளதால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்நிறுவனர்களால் ஊதியம் வழங்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றை நம்பியுள்ள லட்சக்கணக்கான ஊழியர்கள் வாழ்வும் கேள்விக் குறியாகியுள்ளது. இவற்றை சரி செய்ய, உதவித் தொகையோ, வரி ரத்தோ அறிவிக்கப்படவில்லை.
மக்களுக்குத் தேவையான நிதியுதவியை ஏற்படுத்தினால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கு அரசு கட்டுப்படுத்த முடியும். இல்லையேல் அவர்களின் சூழல் வெளியே வரத் தூண்டும். அதைச் செய்யாமல் வெறும் காணொளி காட்சி மூலம் மக்களிடம் பேசுவது மட்டும் எந்த வகையிலும் உதவாது.