உலகம் முழுவதும் பெரும் மனித பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்த துவங்கியுள்ளது. இந்த பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்திலும் அதன் பாதிப்பு அதிகரித்து 100-க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தொடர்ச்சியாக கொரோனா குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அந்தவகையில், இன்று கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தி.மு.க தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கொரோனா குறித்து கேள்வி எழுப்பி அவையில் பேசினார்.
அப்போது பேசிய தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் 4253 பேருக்கு சோதனை கொரோனா வைரஸ் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 32 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சென்னையில் பாதிக்கப்பட்ட மூன்று பேரின் தற்போதைய நிலை என்ன என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். அதேபோல் மற்றவர்களின் உடல்நிலை குறித்த உண்மை நிலையை அரசு கூற வேண்டும்.
நேற்று தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் வந்த ஒரு பயணியின் நிலை என்ன? அவருடன் பயணித்தவர்களுடைய தொடர்புகளை அரசு கண்டுபிடித்துள்ளதா? அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்களா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.
வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் அனைத்து மருத்துவமனையிலும் ஐ.சி.யூ ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சை பிரிவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதா?
கொரோனாவினால் மூச்சுத்திணறல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அதற்கான வென்டிலேட்டர் கொண்ட படுக்கை அறைகள் உள்ள மருத்துவமனைகள் அதிகமாக உள்ளனவா?
எத்தனை மாதிரி ஆய்வுக் கூடங்கள் பரிசோதனை மையங்கள் இருக்கிறது? தற்போது நம்முடைய தமிழகத்தில் கண்டறியும் சோதனை குறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைஅதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு 60 கோடி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு ஐ.சி.யூ-க்களை அதிகப்படுத்த வேண்டும். வென்டிலேட்டர் கொண்ட படுக்கைகள் அதிகப்படுத்த வேண்டும், பரிசோதனை கிட்களை அதிகமாக கொள்முதல் செய்ய வேண்டும்.
வெறும் 40 ஆயிரம் பரிசோதனை கிட்கள் மட்டுமே இருப்பதாக தமிழக அரசு தெரிவிக்கிறது. அதை அதிகரிப்பதில் அரசுக்கு என்ன சங்கடம்? அதை உடனடியாக அதிகப்படுத்த வேண்டும். இதுவரை எடுக்கப்பட்ட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதை தமிழக அரசு தெரிவிக்கவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக சட்டமன்றக் கூட்டத்தொடர் கூடுவதற்கு முன்பு தலைமைச் செயலகத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.