கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் மிகுந்த பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. தற்போது இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை சீனா ஓரளவு கட்டுப்படுத்தி உள்ளதாக செய்திகள் வெளியான அதேவேளையில், இந்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்காமல் அமைதி காக்கிறது. இன்னும் பாதிப்புகள் மோசமானால், அதனைத் தடுக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சட்டமன்றத்தில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘மத்திய அரசோடு இணக்கமாக இருக்கும் தமிழக அரசும் அதே பாணியைத் தான் கையாளுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்துள்ளார்’ என தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மத்திய அரசின் அறிக்கையில், சென்னையில் அனுமதிக்கப்பட்ட நபருக்குக் கொரோனா பாதிக்கவில்லை என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசு போதிய வெளிப்படைத் தன்மையுடன் இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது தி.மு.க எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கொரோனா குறித்து எழுப்பிய கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.
அவரின் நகைச்சுவை பதில் தமிழக மக்களை எரிச்சலடைய செய்துள்ளது. பலரும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இந்த அரசு வேடிக்கை காட்டுகிறது என குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இதைக் கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், “தமிழக அரசு கொரோனா பாதிப்பைக் கடுப்படுத்த போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போதும் வரை மேற்கொள்ளவில்லை.
இதுகுறித்து எதிர்கட்சிகள் சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால், “எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு வயதாகிவிட்டது. சர்க்கரை நோய் இருக்கிறது. அதனால் பயப்படாதீர்கள். அரசு பார்த்துக் கொள்ளும்” என கேலியாகப் பதில் சொல்லி இருக்கிறார்.
இப்படி கிண்டல் செய்து ஒரு தீவிரமான பிரச்சனையை நகைச்சுவையாக மாற்றுகிறது இந்த அரசு. சட்டமன்றத்தில் பேசுவதை நகைச்சுவையாக எண்ணாமல் தமிழக மக்களின் நலன் அறிந்து தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும். கொரோனா பாதிப்பின் வீரியத்தை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.