தமிழ்நாடு

“சாதி மறுப்புத் திருமணம் செய்த இளமதி எங்கே?” - நாடாளுமன்றத்தில் முழங்கிய தி.மு.க எம்.பி!

தருமபுரி தி.மு.க எம்.பி., டாக்டர் செந்தில்குமார் இளமதியை மீட்கவேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்.

“சாதி மறுப்புத் திருமணம் செய்த இளமதி எங்கே?” - நாடாளுமன்றத்தில் முழங்கிய தி.மு.க எம்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கவுந்தபாடியை சேர்ந்த செல்வன் என்ற இளைஞரும், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளமதி என்பவரும் காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினரின் எதிர்ப்பையடுத்து கடந்த 9ம் தேதி சேலம் அருகே சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த சாதி ஆணவக் கும்பல் திருமணம் நடத்தி வைத்த திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகி ஈஸ்வரன், மணமகன் செல்வன் ஆகியோரை கடுமையாகத் தாக்கியதோடு, இளமதி, செல்வன், ஈஸ்வரன் ஆகிய மூவரையும் கடத்திச் சென்றனர்.

இதுகுறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தினர் அளித்த புகாரின் பேரில் போலிஸார் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதையடுத்து செல்வன் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இருவரும் மீட்கப்பட்டனர்.

“சாதி மறுப்புத் திருமணம் செய்த இளமதி எங்கே?” - நாடாளுமன்றத்தில் முழங்கிய தி.மு.க எம்.பி!

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஐந்து நாட்களாகியும் இளமதி எங்கே இருக்கிறார் என்று இன்னும் கண்டுபிடிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் கடத்தலில் பெண்ணின் உறவினர்களான பா.ம.க-வைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் தருமபுரி தி.மு.க எம்.பி., டாக்டர் செந்தில்குமார் இதுகுறித்துக் குரல் எழுப்பி, இளமதியை மீட்கவேண்டும் என வலியுறுத்தினார்.

மக்களவையில் பேசிய செந்தில்குமார் எம்.பி., “சேலத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளம் தம்பதியர் சிலரால் தாக்கப்பட்டு, மணப்பெண் இளமதி கடத்தப்பட்டார். இதற்கான சி.சி.டி.வி ஆதாரங்கள் இருந்தும், போலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

சுயமரியாதை திருமணத்தை இந்தியாவிற்கே அறிமுகம் செய்த இயக்கம் தி.மு.க. இப்போது தமிழகத்திலேயே சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட மணமக்களை சமூக விரோதிகள் கடத்திச் சென்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இளமதியை மீட்கவேண்டும்” என வலியுறுத்தினார்.

இதையடுத்து #இளமதி_எங்கே என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. சாதி வெறியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக வலைதள வாசிகள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories