தமிழகத்தில் வடமாநில கொள்ளையர்களின் ஊடுருவல் தொடர்ந்து நடைபெற்று வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், வீட்டைப் பாதுகாக்கும் வகையில் மக்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏ.டி.எம்களில் கொள்ளையடிப்பது, வங்கிகளில் கொள்ளையடிப்பது என வடமாநிலத்தவர்களின் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக போலிஸார் திணறி வருகின்றனர்.
இப்படி இருக்கையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பணி முடிந்து செல்லும்போது திடீரென பருமனான உடலமைப்பில் இருந்ததைக் கண்டு சந்தேகம் எழுந்திருக்கிறது.
இதனையடுத்து நிறுவன கண்காணிப்பாளரும், காவலாளியும் அந்த நபரிடம் சட்டையைக் கழற்றிக் காட்டும்படி கேட்டுள்ளனர். விழிபிதுங்கிப்போன அந்த வடமாநில நபர் வேறுவழியில்லாமல் சட்டையைக் கழற்றியுள்ளார். அப்போதும் அவரது உடல் பருமனாகவே இருந்ததால் உள்ளே போட்டிருந்த டி-ஷர்ட்டை கழற்றச் சொல்லியிருக்கிறார்கள்.
அதன் பிறகு ஒன்றின் மேல் ஒன்றாக அந்த நபர் அந்த நிறுவனத்தில் தயாரிக்கும் டி-ஷர்ட்டை அணிந்திருந்தது காவலாளிக்கும் கண்காணிப்பாளருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி-ஷர்ட்டுகளை கழற்றியபிறகு மெலிந்த தேகத்தில் அந்த இளைஞர் காணப்பட்டாலும் கால்கள் பழைய நிலையிலேயே இருந்திருக்கிறது. ஆகவே கால்சட்டையையும் கழற்றுமாறு கூறியபிறகு, பேன்ட்டிலும் அந்த இளைஞர் டி-ஷர்ட்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் விசாரித்ததில், பண்டல் பண்டலாக டி-ஷர்ட்டுகளை திருடிச் சென்று அவரது சொந்த ஊரில் விற்பனை செய்ய முயன்றிருக்கிறார் எனத் தெரியவந்திருக்கிறது.
இதனையடுத்து, அந்த வடமாநில இளைஞரை பணியில் இருந்து நீக்கி விரட்டியடித்திருக்கிறார்கள். இது அந்நிறுவன ஊழியர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.