தி.மு.க பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் காலமானார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் உடலுக்கு தி.மு.க கொடி போர்த்தப்பட்டது. அப்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியரின் இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து மாலை 4.15 மணியளவில் பேராசிரியரின் உடல் அவரது இல்லத்தில் இருந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது தி.மு.க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு கட்சியின் நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இறுதிச்சடங்கின் போது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். சடங்கு முடிந்ததைத் தொடர்ந்து அண்ணாநகர் வேலங்காடு இடுகாட்டில் பேராசிரியர் உடல் தகனம் செய்யப்பட்டது. பேராசிரியரின் மறைவு தி.மு.க தொண்டர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளத.
இதனிடையே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் மறைவுக் குறித்து ட்விட்டரில் உருக்கமாகப் பதிவு வெளிட்டுள்ளார். அந்த பதிவில்,“எனக்குத் தாயுமாய் தந்தையுமாய் தலைவருமாய் உயிருமாய் இருந்த பேராசிரியப் பெருந்தகையின் இறுதிப் பயணத்தில் பங்கெடுத்து வீரவணக்கம் செலுத்தி இருக்கிறேன்!
மறக்காது உம் குரல் - கொள்கை - நோக்கு! கனவு ஆசானே! உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் காட்டுவோம்! வாழ்க பேராசிரியர் புகழ்!” என தெரிவித்துள்ளார்.