தமிழ்நாடு

“பெண்களுக்கான சமத்துவம் & உரிமையைப் பெற சூளுரைப்போம்” - வைகோ வாழ்த்து!

பெண் இனத்தின் மாண்பு காக்கச் சூளுரைப்போம் எனக் குறிப்பிட்டு சர்வதேச பெண்கள் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ.

“பெண்களுக்கான சமத்துவம் & உரிமையைப் பெற சூளுரைப்போம்” - வைகோ வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சர்வதேச பெண்கள் தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், ம.தி.மு.க பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

“மார்ச் 8-ஆம் நாள் உலக மகளிர் நாளாகும். 19-ஆம் நூற்றாண்டிலிருந்தே அமெரிக்க நாட்டிலும், ஐரோப்பிய நாடுகளிலும் உரிமைகளுக்காகப் பெண்கள் போராடினர். கிளாரா ஜெட்கின்ஸ் அம்மையாரின் தலைமையில் பெண்களின் உரிமை காக்கும் இயக்கம் தோன்றியது.

1889 ஆம் ஆண்டு, கிளாரா ஜெட்கின், ‘அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தில் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும்’ என்று உரிமைக்குரல் எழுப்பினார்.

“பெண்களுக்கான சமத்துவம் & உரிமையைப் பெற சூளுரைப்போம்” - வைகோ வாழ்த்து!

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில், “எங்களுக்குத் தொழிற்சங்க உரிமை வேண்டும்; பணிபுரிகின்ற இடங்களில் சமநீதி கிடைக்க வேண்டும்” என்று ஆயிரக்கணக்கான பெண்கள் அணிவகுத்து வந்தார்கள். அவர்கள் வெற்றி பெற்றதை வாழ்த்திப் பாராட்டி, மூன்று ஆண்டுகள் கழித்து, “இனிமேல் இந்த நாள்தான் உலக மகளிர் நாள்” என்று கிளாரா ஜெட்கின் அறிவித்தார்.

சோவியத் புரட்சியின்போது, ஆரோரா கப்பலில் பீரங்கிகள் வெடித்தபோது, 1917 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் நாள், பெட்ரோகாம் நகரில் எட்டாயிரம் பெண்கள் அணிவகுத்து, “உரிமை வேண்டும்; ஒடுக்குமுறையை எதிர்ப்போம்” என்று முழங்கினார்கள். அவர்கள் உயர்த்திய உரிமைப் பதாகை, சோவியத் புரட்சிக்கு நுழைவாயில் ஆயிற்று. பல ஆண்டுகள் போராடிய பின்னரே இங்கிலாந்து நாட்டில் பெண்கள் வாக்குரிமை பெற்றார்கள்.

தமிழ் இனத்தின் வரலாற்றில் பெண்கள் உன்னதமான மதிப்பைப் பெற்றார்கள். சங்க காலத்திலேயே பாடல்கள் புனைகின்ற பெண்பாற் புலவர்கள் இருந்தார்கள். வேந்தனின் அரசவையிலேயே கோவலன் கொலைக்கு நீதி கேட்டு எரிமலையாய்ச் சீறிய கண்ணகியின் காப்பியத்தை இளங்கோவடிகள் சிலப்பதிகாரமாகப் படைத்தார்.

“பெண்களுக்கான சமத்துவம் & உரிமையைப் பெற சூளுரைப்போம்” - வைகோ வாழ்த்து!

‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ என்றார் திருவள்ளுவர். 20-ஆம் நூற்றாண்டில் பெண் உரிமைக்காக சங்கநாதம் செய்தவர் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் ஆவார்கள். அவரது துணைவியார் நாகம்மாளும், சகோதரி கண்ணம்மாளும் மதுவை எதிர்த்துப் போராடினார்கள்.

பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று செங்கல்பட்டு மாநாட்டில் தந்தை பெரியார் பிரகடனம் செய்தார். அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது “பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு” என்று சட்டம் இயற்றினார். பெண்களுக்கான சமத்துவத்தையும், உரிமைகளையும் பெறுகின்ற நிலையை உருவாக்க மகளிர் நாளில் சூளுரைப்போம்.” என வைகோ குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories