"India 2020 to 2030: Gen Y's Vision for the decade" என்ற தலைப்பில் சென்னை ஐ.ஐ.டியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று இன்று (பிப்.,29) மாலை 5 மணியளவில் நடைபெற இருக்கிறது. இதில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று உரையாற்றி, மாணவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
இதற்காக சில 6 முக்கிய அறிவுறுத்தல்களை மாணவர்களுக்கு இமெயில் மூலம் அனுப்பியுள்ளது ஐ.ஐ.டி நிர்வாகம். அதில், மாணவர்கள் மொபைல் போன்கள் உள்ளிட்ட எந்த எலக்ட்ரானிக் பொருட்களும் கொண்டுவரக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரக்கூடாது.
கலந்துரையாடல் நடைபெறும் அரங்கில் போட்டோ எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ அனுமதி இல்லை. அடையாள அட்டை கட்டாயம் அணிருந்திருக்க வேண்டும் என்பதோடு, எந்த மாணவர்களும் கருப்பு நிற சட்டையோ/குர்தாக்களோ அணிந்து வரக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சி.ஏ.ஏ உள்ளிட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் போராடி வரும் நிலையில், வெங்கையா நாயுடு பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சியில் மாணவர்கள் யாரும் எதிர்ப்பைக் காட்டிவிடக் விடக்கூடாது என்பதற்காக ஐ.ஐ.டி நிர்வாகம் இத்தகைய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
முன்னதாக, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வருகை தருவதற்கு முந்தைய நாள் கல்விக் கட்டண உயர்வை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலிஸார், மாணவர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.